‘மேயாதமான்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான ரத்னகுமார், அடுத்து ‘ஆடை’, ‘குலுகுலு’ படங்களை இயக்கினார். இப்போது அவர் இயக்கியுள்ள படத்துக்கு ‘29’ என்று டைட்டில் வைத்துள்ளனர். இதில் விது, ப்ரீத்தி அஸ்ராணி, அனுஸ்ரீ வேகன், ஸ்ரேயாஸ் பாத்திமா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்துக்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.
இந்தப்படத்தை ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ், ஜீ ஸ்குவாட் நிறுவனங்கள் சார்பில் கார்த்திகேயன், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்தின் டைட்டில் லுக் மற்றும் ப்ரோமோ வீடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இயக்குநர் ரத்னகுமார் பேசும்போது, “நான் ‘மது’ என்ற பெயரில் குறும்படம் இயக்கினேன். அதுதான் ‘மேயாதமான்’ எனும் திரைப்படமாக மாறியது. அப்படம் மூலம் என்னை அறிமுகப்படுத்தியது, ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம். இந்தப் படத்துக்கு ‘29’ என ஏன் பெயரிட்டேன் என்றால் அந்த வயதுதான் முக்கியமானது. என் வாழ்க்கையில் எனக்கு அந்த வயதில்தான் பகிர்ந்து கொள்ள இயலாத எதிர்மறை எண்ணம் ஏற்பட்டது.
அந்தத் தருணத்தில் படத்தொகுப்பாளர் சதீஷ்குமார் தான் ‘உங்களை நீங்கள் உள்ளுக்குள் தேடுங்கள் அல்லது புறத்தில் தேடுங்கள்’ என்று சொல்லி, சபரிமலைக்கு மாலை போட்டு யாத்திரை சென்று வாருங்கள் என அறிவுறுத்தினார். என்னைப் பொறுத்தவரை உடல்தான் கடவுள். மனசு தான் தெய்வம் என்ற கொள்கை உடையவன். சபரிமலை யாத்திரை செல்லும்போது வாழ்க்கை ஏற்றம் இறக்கங்களைக் கொண்டது என்பதை உணர்ந்தேன். ‘மேயாத மான்’ படத்தில் பணியாற்றியவர்களுடன் மீண்டும் இதில் இணைந்துள்ளேன். மேயாதமான் ரொமான்டிக் காமெடி என்றால் இந்த `29’ படமும் வித்தியாசமான கேரக்டருடன் கூடிய ரொமான்டிக் படம்தான். நாம் அன்றாடம் பார்க்கும் பக்கத்து வீட்டுப் பையனின் கதை தான் இது” என்றார். படக்குழுவினர் கலந்துகொண்டனர்.







