தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நேற்று முன்தினம் முலான்பூரில் நடைபெற்ற 2-வது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 51 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. 214 ரன்கள் இலக்கை துரத்திய இந்திய அணி 19.1-வது ஓவரில் 162 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக திலக் வர்மா 62 ரன்கள் சேர்த்தார்.
தொடக்க வீரரான ஷுப்மன் சந்தித்த முதல் பந்திலேயே ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். கேப்டன் சூர்யகுமார் யாதவ் 5 ரன்களில் நடையை கட்டினார். முதல் போட்டியில் சிறப்பாக விளையாடிய ஹர்திக் பாண்டியா 20, அக்சர் படேல் 21 ரன்களில் வெளியேறினர். பெரிய அளவிலான இலக்கை துரத்திய நிலையில் ஷுப்மன் கில்லும், சூர்யகுமார் யாதவும் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாதது அணிக்கு அழுத்தத்தை அதிகரித்தது.
இவர்கள் இருவரிடம் இருந்து சர்வதேச டி20 போட்டிகளில் கடந்த ஓராண்டு காலமாகவே பெரிய அளவிலான மட்டை வீச்சு வெளிப்படவில்லை. ஷுப்மன் கில் கடந்த செப்டம்பரில் நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரின் போது இந்திய டி20 கிரிக்கெட் அணிக்குள் மீண்டும் கொண்டுவரப்பட்டார். இந்த தொடருக்கு முன்னதாக இங்கிலாந்தில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி 2 வெற்றிகளையும், தொடரை சமனிலும் முடித்திருந்தது.
ஷுப்மன் கில் டி20 அணிக்குள் கொண்டுவரப்பட்டதால் சிறந்த பார்மில் உள்ள தொடக்க வீரரான சஞ்சு சாம்சன் வெளியே அமரவைக்கப்பட்டார். ஆனால் ஷுப்மன் கில்லின் மட்டைவீச்சில் இருந்து போதிய அளவிலான ரன் குவிப்பு வரவில்லை. தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டி 20 போட்டியில் 4 ரன்களில் ஆட்டமிழந்த அவர், நேற்று முன்தினம் நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.
டி20 உலகக் கோப்பை வரும் 2026-ம் ஆண்டு பிப்ரவரி-மார்ச் மாதம் இந்தியாவில் நடைபெற உள்ள நிலையில் ஷுப்மன் கில்லின் மோசமான பார்ம் கவலையையும், பல்வேறு கேள்விகளையும் உருவாக்கி உள்ளது. இந்நிலையில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான 2-வது டி20 ஆட்டத்தில் 51 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த பின்னர் இந்திய அணியின் துணை பயிற்சியாளரான டென் டாஷேட் கூறியதாவது:
கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற ஆஸ்திரேலிய தொடருக்கு பின்னர் ஷுப்மன் கில்லின் மனநிலையில் சிறந்த மாற்றத்தை கண்டோம். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தற்போதைய டி20 தொடரில் முதல் இரு ஆட்டங்களில் அவர், எளிதாக ஆட்டமிழந்தார். முதல் போட்டியில் பவர்பிளேவில் அதிரடியாக விளையாடுமாறு நாங்கள்தான் கூறியிருந்தோம்.
அந்த போட்டி நடைபெற்ற கட்டாக் ஆடுகளம் சிறப்பானது இல்லை. இதனால் அந்த ஆட்டத்தை விட்டுவிடலாம். 2-வது போட்டியில் ஷுப்மன் கில் சிறந்த பந்தில் ஆட்டமிழந்தார். பார்மில் தேக்கம் அடையும் போது இது நிகழும். கில்லின் பேட்டிங் தரம் எங்களுக்கு தெரியும். அவருடைய ஐபிஎல் சாதனையைப் பார்த்தால் சீசனுக்கு 700 ரன்கள், 600 ரன்கள், 800 ரன்கள், 600 ரன்கள் என குவித்துள்ளார். அதனால் அவர், மீண்டும் பார்முக்கு திரும்புவார் என்று நாங்கள் நம்புகிறோம்.
சூர்யகுமார் யாதவுக்கும் இதே நிலைமைதான். எங்கள் திட்டமிடல் மற்றும் அணியை கட்டமைத்த விதத்தில் சற்று பின்தங்கியிருக்கிறோம். வெளியில் இருந்து பார்க்கும்போது இது ஒரு கவலையாகத் தெரிகிறது, ஆனால் சூர்யகுமார் யாதவும், ஷுப்மன் கில்லும் சரியான நேரத்தில் மீண்டு வருவார்கள் என்பதில் எனக்கு முழுமையான நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.







