மக்களவையில் தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்து நேற்று முன்தினம் நடைபெற்ற விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, உள்துறை அமைச்சர் அமித் ஷா இடையே காரசாரமான விவாதம் நடைபெற்றது.
இந்நிலையில் நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல் காந்தி நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: வாக்குத் திருட்டு குறித்த எனது செய்தியாளர் சந்திப்பு குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வருமாறு அமைச்சர் அமித் ஷாவுக்கு நேரடியாக சவால் விடுத்தேன். ஆனால் அவரிடமிருந்து எந்த பதிலும் கிடைக்கவில்லை.
அவர் தவறான வார்த்தைகளை பயன்படுத்தினார். அவரது கைகள் நடுங்கின. இதையெல்லாம் நீங்கள் பார்த்திருப்பீர்கள். அவர் மனதளவில் அழுத்தத்தில் இருக்கிறார். வாக்குத் திருட்டு என்பது மிகப்பெரிய தேசத்துரோகம். வெளிப்படையான வாக்காளர் பட்டியல்கள், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் செயல்பாடு என எனது எந்தவொரு கேள்விக்கும் உள்துறை அமைச்சர் பதில் அளிக்கவில்லை. இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறினார்.







