கலைமகள் சபாவுக்கு சொந்தமாக தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் உள்ள சொத்துகளின் ஏலத்தை கண்காணிக்க முன்னாள் நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் தலைமையில் ஒருநபர் ஆணையம் அமைத்து உயர் நீதிமன்றம் உத்தரவி்ட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கிய ‘கலைமகள் சபா’ நிதி நிறுவனம் 5.33 லட்சம் உறுப்பினர்களிடம் பெற்ற முதலீடு மூலமாக தமிழகம், ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் சுமார் 13,500 ஏக்கர் நிலங்களை வாங்கி ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டது.
இந்த நிறுவனத்துக்கு எதிராக முறைகேடு புகார்கள் வந்ததை அடுத்து, இதை நிர்வகிக்க பதிவுத் துறை உதவி தலைமைப் பதிவாளர் அந்தஸ்துக்கு குறையாத அதிகாரியை நியமிக்க உயர் நீதிமன்றம் கடந்த 2021-ல் உத்தரவிட்டது.
அதன்படி 4 அதிகாரிகள் நியமிக்கப்பட்டும், முன்னேற்றம் இல்லாததால் கோவையை சேர்ந்த கருப்பண்ணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
‘தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களிலும் கலைமகள் சபாவின் சொத்துகள் உள்ளதால், தமிழக அரசு அதிகாரிகளுக்கு பதிலாக உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதியை நியமித்து, முதலீட்டாளர்களுக்கான தொகையை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கோரியிருந்தார்.
இந்நிலையில், நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.செந்தில் குமார் அடங்கிய சிறப்பு அமர்வில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, மேல்முறையீட்டு மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர்கள் வி.ஆர்.கமலநாதன், பி.சின்னத்துரை, ஆர்.எஸ். செல்வம் ஆகியோரும், தமிழக அரசுத் தரப்பில் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், மூத்த வழக்கறிஞர் ஆர்.சிங்காரவேலன், வழக்கறிஞர்கள் ஜி.மோகனகிருஷ் ணன், நர்மதா சம்பத் உள்ளிட்டோரும் ஆஜராகி வாதிட்டனர்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் தமது உத்தரவில் கூறியதாவது: தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் உள்ள சொத்துகளையும் மதிப்பிட வேண்டி உள்ளது. ஆக்கிரமிப்பில் உள்ள சொத்துகளை அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது.
கலைமகள் சபாவின் அனைத்து சொத்துகளையும் சரிபார்த்து, மின்னணு முறையில் பொது ஏலம் விட்டு, உறுப்பினர்களுக்கு சேர வேண்டிய தொகையை வழங்க ஏதுவாக உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் தலைமை யில் ஒருநபர் ஆணையம் அமைக்கப்படுகிறது. அவருக்கு உறுதுணையாக வழக்கறிஞர்கள் எம்.எழிலரசி, என்.பிரேமலதா ஆகியோர் நியமிக்கப்படுகின்றனர்.
அனைத்து உறுப்பினர்களின் விவரங்களையும் முறையாக இணையத்தில் பதிவு செய்வதற்கான நடவடிக்கைகளையும் இந்த ஆணையம் மேற்பார்வையிட வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவி்ட்டுள்ளனர்.







