கரோனா பேரிடரின்போது செல்போன் செயலி மூலம் ரூ.1,000 கோடி சுருட்டிய வழக்கில் 2 சீனர்கள் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.
இதுகுறித்து சிபிஐ அதிகாரிகள் நேற்று கூறியதாவது: கரோனா பொதுமுடக்கத்தின் போது ”எச்பிஇசட் டோக்கன்ஸ்” என்ற போலியான செல்போன் செயலியைப் பயன்படுத்தி பொதுமக்களிடமிருந்து ரூ.1,000 கோடி திரட்டப்பட்டுள்ளது. கிரிப்டோ கரன்சி மற்றும் அதிக வட்டி தருவதாக கூறி இந்த மோசடி நடைபெற்றது.
வெளிநாட்டைச் சேர்ந்த பெரிய கும்பல் சைபர் கிரைம் நெட்வொர்க்கை பயன்படுத்தி திட்டமிட்டு இந்த மோசடியில் ஈடுபட்டது விசாரணையில் கண்டறியப்பட்டது. இந்த சதித் திட்டத்துக்கு சீனாவைச் சேர்ந்த வான் ஜுன், லீ அன்மிங் ஆகிய இருவரும் மூளையாக செயல்பட்டுள்ளனர்.
தற்போது அவர்கள் இருவர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதுதவிர மேலும் 25 தனிநபர்கள் மற்றும் 30 நிறுவனங்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.







