காவல் துறையில் உயர் அதிகாரிகளுக்கான பதவி உயர்வு பட்டியல் தயாரிக்கும் பணி தீவிரம்

0
41

தமிழக காவல் துறையில் உயர் போலீஸ் அதிகாரிகளுக்கான பதவி உயர்வு பட்டியல் தயாரிப்புப் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. மேலும், சட்டம்-ஒழுங்கு பொறுப்பு டிஜிபியாக வெங்கடராமனே தொடர்கிறார்.

ஐபிஎஸ் அதிகாரிகளான சீமா அகர்வால், ராஜீவ் குமார், சந்தீப்ராய் ரத்தோர், அபய்குமார் சிங், வன்னிய பெருமாள், மகேஷ் குமார் அகர்வால், வெங்கடராமன், வினித் தேவ் வான்கடே, சஞ்சய் மாத்தூர் ஆகியோர் டிஜிபி-க்களாக பல்வேறு பிரிவுகளில் பணிபுரிகின்றனர்.

தலைமை டிஜிபி-யான சட்டம்-ஒழுங்கு டிஜிபி-யாக இருந்த சங்கர் ஜிவால் கடந்த ஆக.31-ம் தேதி ஓய்வுபெற்ற நிலையில், புதிய சட்டம் – ஒழுங்கு டிஜிபி இதுவரை நியமிக்கப்பட வில்லை. அதேநேரம் பொறுப்பு டிஜிபி-யாக நிர்வாகப் பிரிவில் இருந்த வெங்கடராமனை தமிழக அரசு நியமித்தது.

இந்நிலையில், நிரந்தர டிஜிபி-யாக சீனியாரிட்டியில் உள்ள சீமா அகர்வால், ராஜீவ் குமார், சந்தீப் ராய் ரத்தோர் ஆகியோரில் ஒருவரை நியமிக்க வேண்டும் என எதிர்க்கட்சி உள்பட பல்வேறு தரப்பிலிருந்தும் தொடர்ந்து அழுத்தம் தரப்பட்டு வருகிறது.

மேலும், இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்திலும் நடந்து வருகிறது. ஆனால், தற்போது வரை இந்த விஷயத்தில் தமிழக அரசு மவுனம் காக்கிறது. இதற்கிடையே, அடுத்த பதவி உயர்வுக்கான போலீஸ் அதிகாரிகளின் பட்டியல் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அதாவது 1995-ல் ஐபிஎஸ் ஆக தேர்வான கூடுதல் டிஜிபி-க்களான டேவிட்சன் தேவாசீர்வாதம், சந்தீப் மித்தல், பாலநாக தேவி ஆகிய 3 பேரும் டிசம்பர் 31-ம் தேதி அல்லது ஜனவரி முதல் தேதியில் டிஜிபியாக பதவி உயர்த்தப்பட உள்ளனர்.

அதோடு, ஐஜி-க்களாக உள்ள அன்பு, பிரேம் ஆனந்த் சின்ஹா, தீபக் டாமோதர், செந்தில்குமார், அனிதா உசேன், நஜ்மல் ஹோடா, மகேந்திர குமார் ஆகிய 7 அதிகாரிகள் கூடுதல் டிஜிபி-க்களாக பதவி உயர்வு பெற உள்ளனர். மேலும் 15 எஸ்.பி-க்களும் டிஐஜி-யாக பதவி உயர்வு பெற உள்ளனர்.

இதுதவிர, அடுத்த மாதம் முதல் வாரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட ஆட்சியர்கள், எஸ்.பி-க்கள் மாநாடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மாநாடு முடிந்தவுடன் 20-க்கும் மேற்பட்ட போலீஸ் அதிகாரிகள் பணியிடம் மாற்றம் செய்யப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

அந்த பட்டியலும் தற்போது முழு வீச்சில் தயாராகி வருகிறது. அதேநேரம், நிரந்தர டிஜிபி விவகாரத்தில் அரசு அவசரம் காட்டாது; வெங்கடராமன் தொடர்ந்து டிஜிபியாக செயல்படுவார் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here