காற்று தரக் குறியீடு (ஏ.கியூ.ஐ.) 6 வகைகளாக தரம் பிரிக்கப்பட்டிருக்கிறது. 0-50 புள்ளிகளுக்கு இடையே இருந்தால் பாதுகாப்பானது. 51-100 புள்ளிகள் இருந்தால் மிதமானது.
101 முதல் 150 புள்ளிகள் இருந்தால் நோயாளிகளின் உடல்நலத்துக்கு தீங்கானது. 151 முதல் 200 புள்ளிகள் வரை இருந்தால் ஆரோக்கியமான மக்களின் உடல் நலனுக்கும் தீங்கு விளைவிக்கும். 201 முதல் 300 வரை இருந்தால் மக்களின் உடல்நலனுக்கு அதிக தீங்கினை விளைவிக்கும். 301 முதல் 500 வரை இருந்தால் மிகவும் அபாயகரமானதாகும்.
டெல்லியில் நேற்று நிலவரப்படி காற்று மாசு அளவு 450 புள்ளிகளாக இருந்தது. கடந்த சில வாரங்களாக இதே நிலை நீடிக்கிறது. இந்த சூழலில் டெல்லியில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் 50% ஊழியர்கள் வீடுகளில் இருந்து பணியாற்ற டெல்லி அரசு நேற்று உத்தரவிட்டது. பள்ளிகள், கல்லூரிகளில் திறந்தவெளி மைதானத்தில் மாணவ, மாணவியர் விளையாட ஏற்கெனவே தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.









