பூர்த்தி செய்த எஸ்ஐஆர் படிவங்களை சமர்ப்பிக்க டிச.4 கடைசி நாள்: அர்ச்சனா பட்நாயக் தகவல்

0
24

பூர்த்தி செய்த எஸ்ஐஆர் படிவங்களை சமர்ப்பிக்க டிச.4-ம் தேதிக்கு பிறகு அவகாசம் நீட்டிக்கப்படாது. பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்பட்டால், அதற்கான காரணம் தொடர்புடைய வாக்குச்சாவடியில் ஒட்டப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி (CEO) அர்ச்சனா பட்நாயக் தகவல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் சென்னை தலைமை செயலகத்தில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் 6.41 கோடி வாக்காளர்களின் பெயர்கள் இடம்பெற்ற வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்த பணி நடைபெற்று வருகிறது.

இப்பணியில் 68,470 பிஎல்ஓக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட 83,256 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அரசியல் கட்சி சார்பில் பிஎல்ஏக்கள் 2,45,340 பேர் நியமிக்கப்பட்டு, எஸ்ஐஆர் பணிக்கு உதவி வருகின்றனர். இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் இவ்வளவு பிஎல்ஏக்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் 33 ஆயிரம் தன்னார்வலர்கள் உதவி செய்து வருகின்றனர்.

இதுவரை 6.16 கோடி படிவங்கள் (96 சதவீதம்) வாக்காளர்களிடம் வழங்கப்பட்டுள்ளன. இதில் 50 சதவீத படிவங்கள், பூர்த்தி செய்யப்பட்டு திரும்ப பெறப்பட்டுள்ளன. அதில் 2.59 கோடி படிவங்கள் (40 சதவீதம்) கணினியில் பதிவேற்றப்பட்டுள்ளன. 327 பிஎல்ஓக்கள் தங்கள் பணிகளை 100 சதவீதம் நிறைவு செய்துள்ளனர்.

சென்னையில் 96 சதவீத படிவங்கள் கொடுக்கப்பட்டு, 50 சதவீத படிவங்கள் திரும்ப பெற்று, 30 சதவீத படிவங்கள் கணினியில் ஏற்றப்பட்டுள்ளன. ஆன்லைன் மூலம் 2 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். ஏற்கெனவே வாக்காளர்களாக இருப்பவர்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை. வாக்காளர்கள் தங்களால் முடிந்த விவரங்களை பூர்த்தி செய்து கொடுக்கலாம்.

மீதம் உள்ளவற்றை பூர்த்தி செய்ய பிஎல்ஓக்கள், தன்னார்வலர்கள் உதவுவார்கள். பிஎல்ஓக்களுக்கு அதற்கான செயலிகள் வழங்கப்பட்டுள்ளன. உரிய விவரங்கள் இல்லை என படிவத்தை கொடுக்காமல் இருந்துவிடக்கூடாது. உரிய காரணமின்றி தகுதியான வாக்காளர்கள் ஒருவரின் பெயரும் பட்டியலில் இருந்து நீக்கப்படாது.

வாக்காளர் களின் பெயர்கள் நீக்கப்பட்டால், அதற்கான சரியான காரணம், அந்தந்த வாக்குச் சாவடிகளில் ஒட்டப்படும். தேர்தல் ஆணைய இணையதளத்திலும் வெளியிடப்படும்.

இறப்பு, வீடுகளில் இல்லாதவர்கள், நிரந்தரமாக வேறு இடங்களுக்கு குடியேறியவர்கள், இரட்டை வாக்குரிமை வைத்திருப்பவர்கள், படிவத்தை பெற்றுச்செல்லாதவர்கள் அல்லது பூர்த்தி செய்து திருப்பி தராதவர்கள் ஆகிய 5 காரணங்களில் ஏதேனும் ஒரு காரணம் இருந்தால் மட்டுமே பெயரை பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்று தெளிவான அறிவுறுத்தல்கள் வாக்காளர் பதிவு அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

டிச.4-ம் தேதி வரை மட்டுமே பூர்த்தி செய்த படிவங்களை பெற அவகாசம் வழங்கப்படும். அதன்பிறகு அவகாசம் நீட்டிக்கப்படாது.

ஒரே தொகுதிக்குள் இருந்தால் படிவங்களை பெற்று, பூர்த்தி செய்து கொடுக்கலாம். வேறு தொகுதியில் குடியேறி இருந்தால், அவர்கள் முகவரி மாற்றுவதற்காக படிவம் 8-ஐ தான் கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here