திமுக இளைஞரணியின் திருவள்ளூர் மத்திய மாவட்டம், ஆவடி சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட நிர்வாகிகள் அறிமுகக் கூட்டம் நேற்று திருவேற்காட்டில் நடைபெற்றது. இதில்,தமிழக துணை முதல்வரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார்.
1.50 கோடி தேர்தல் நிதி: அப்போது அமைச்சர் சா.மு.நாசர், திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக சார்பில், தேர்தல் நிதியாக ரூ.1.50 கோடிக்கான காசோலையை உதயநிதி ஸ்டாலினிடம் வழங்கினார். தொடர்ந்து, இளைஞரணி நிர்வாகிகள் மத்தியில் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: திமுகவை தவிர மற்ற கட்சிகளில், சில கட்சிகளுக்கு வரலாறு கிடையாது; சில கட்சிகளுக்கு சின்ன வரலாறு உண்டு.
திமுகவுக்கு மட்டும்தான் இளைஞரணிக்கு என்றே தனிவரலாறு உண்டு. பல கட்சிகள் பூத் கமிட்டி அமைக்கவே சிரமப்பட்டு கொண்டிருக்கின்ற வேளையில் திமுக இளைஞரணி மட்டும்தான் பூத்துக்கு ஒரு அமைப்பாளரை நியமித்திருக்கிறது.இது மிகப் பெரிய ஒரு சாதனை.
இளைஞரணியில் கொடுத்துள்ள பொறுப்பு, நிச்சயமாக பதவி கிடையாது; அது பொறுப்பு என்பதை உணர்ந்து செயல்படவேண்டும். இளைஞரணி நிர்வாகிகள் சரியாக உழைத்தால், அவர்களுக்கான அங்கீகாரத்தை திமுக தலைவர் நிச்சயம் கொடுப்பார்.
இளைஞரணி நிர்வாகிகள் ஒவ்வொருவரும் நீங்கள் வசிக்கும் பகுதியில் 50 வாக்காளர்களை உங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். எப்படி களத்தில் சிறப்பாக செயல்படுகிறீர்களோ, அதே மாதிரி சமூக வலைதளங்களில் சிறப்பாக செயல்படவேண்டும்.
திமுகவை பாராட்டுகிற செய்திகள் மட்டுமல்ல, திமுக மீது வைக்கப்படும் விமர்சனங்களையும் சேர்ந்து படியுங்கள். அதற்கான பதில்களையும் தேடுங்கள். இன்று பல இளைஞர்கள் எந்த இயக்கத்தில் சேருவது என்ற குழப்பத்தில் இருக்கிறார்கள்.
இளைஞரணியினர் மாற்றுக்கட்சி இளைஞர்கள் உள்ளிட்ட அனைவரிடமும் பேசி, திமுகவுக்கு அதிகமான இளைஞர்களை நாம் அழைத்து வரவேண்டும். இதை நான் வெறும் தேர்தலுக்காக மட்டும் சொல்லவில்லை. தேர்தலுக்குப் பிறகும், எதிர்காலத்தில் மிகப்பெரிய பலமாக இளைஞர் பட்டாளம் இருக்கவேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.








