சென்னை: பிரான்ஸ் அரசின் உயரிய செவாலியர் விருது பிரபல ஆர்ட் டைரக்டர் தோட்டாதரணிக்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கலை இயக்குநர் ( ஆர்ட் டைரக்டர் ) தோட்டா தரணிக்கு, பிரான்ஸ் அரசின் உயரிய அங்கீகாரமான ‘செவாலியே’ விருது அறிவிக்கப்பட்டிருப்பது குறித்து வாழ்த்து தெரிவித்து முதல்வர் ஸ்டாலின் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள பதிவில், “ஆக்ஸ்போர்டில் ஒளிரும் தந்தை பெரியாரின் ஓவியத்தைத் தந்து நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்திய தோட்டா தரணி க்கு, பிரான்ஸ் அரசின் உயரிய அங்கீகாரமான ‘செவாலியே’ விருது அறிவிக்கப்பட்டிருப்பது நம் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கியுள்ளது.
அரசு கவின் கலைக் கல்லூரியில் பயின்ற தோட்டா தரணி, இந்தியாவில் இருந்து இவ்விருது பெற்ற மிகப்பெரும் ஆளுமைகளின் வரிசையில் இணையவுள்ளது பெருமையளிக்கிறது. பார் போற்றும் உங்கள் சாதனைக்குப் பாராட்டுகள்.” எனத் தெரிவித்துள்ளார்.
நாளை விருது விழா: தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாள மொழிப் படங்கள் மட்டுமின்றி பிரெஞ்சு, இத்தாலியப் படங்களுக்கும் கலை இயக்குநராகப் பணியாற்றியுள்ள தோட்டாதரணி, ‘நாயகன்’ படத்துக்காகப் மும்பை தாராவி செட், ரஜினி நடித்த ‘சிவாஜி’, மணிரத்னம் இயக்கிய ‘பொன்னியின் செல்வன்’ போன்ற படங்களுக்காக பிரம்மாண்ட செட்கள் அமைத்து அசத்தியவர்.
சென்னையில் உள்ள அலையன்ஸ் பிரான்சைஸ் வளாகத்தில் நவ.13 அன்று ‘லா மேசான்’ (La Maison) என்ற ‘கஃபே–நூலக’த்தை இந்தியாவுக்கான பிரான்ஸ் தூதர் தியெரி மாத்தோ திறந்து வைக்கிறார். சென்னை மற்றும் புதுச்சேரி பிரான்ஸ் துணைத் தூதர் எத்தியென் ரோலான்-பியெக், அலையன்ஸ் பிரான்சைஸ் தலைவர் டி.கே.துர்கா பிரசாத், இயக்குநர் டாக்டர் பாட்ரிசியா தேரி–ஹார்ட் ஆகியோர் பங்கேற்க இருக்கின்றனர். அந்த நிகழ்வில் தோட்டாதரணிக்கு செவாலியர் விருது வழங்கப்பட இருக்கிறது. கலைக்கு அவர் ஆற்றிய பங்களிப்பை கவுரவிக்கும் விதமாக, இவ்விருது வழங்கப்படுகிறது.














