டெல்லியில் குண்டு வெடித்த காருடன் சுற்றிவந்ததாக கருதப்படும் மற்றொரு கார் பரிதாபாத் அருகே பறிமுதல் செய்யப்பட்டது.
டெல்லியில் கடந்த திங்கட்கிழமை மாலை ஒரு கார் வெடித்துச் சிதறியது. ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதியின் தற்கொலை தாக்குதலாக இது கருதப்படுகிறது. இது தொடர்பாக சுமார் 200 சிசிடிவி கேமராக்களின் பதிவுகள் ஆராயப்பட்டு வருகின்றன. இதில் குண்டு வெடித்த ஹுண்டாய் ஐ20 காருடன் சிவப்பு நிற ‘ஈகோ ஸ்பாட்’ காரும் சுற்றி வந்தது பதிவாகி உள்ளது. இந்த சிவப்பு காரில் டெல்லி பதிவு எண் உள்ளது.
இரு கார்களும் அன்று மதியம் செங்கோட்டை முன்பாக அருகருகே நிறுத்தப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது. எனவே அந்த சிவப்பு நிற கார் தீவிரவாதிகளின் காரா என்ற சந்தேகத்தின் அடிப்படையில் டெல்லி போலீஸார் அதை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் பரிதாபாத் அருகே உள்ள கண்டவலி கிராமத்தில் கேட்பாரற்று இருந்த அந்த சிவப்பு நிற காரை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
வெடித்து சிதறிய காரில் இருந்த டாக்டர் உமர் கிராமத்திலும் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். உமரின் தாய், தந்தை மற்றும் இரண்டு சகோதரர்களிடம் தீவிர விசாரணை நடைபெறுகிறது. தங்கள் மகன் உமருக்கு விரைவில் மணமுடிக்கும் பணியில் இருந்ததாக பெற்றோர் கூறியுள்ளனர். உமர் மணமுடிக்க இருந்த பெண்ணும் ஒரு மருத்துவர்.
காஷ்மீரைச் சேர்ந்த இவர் யூபிஎஸ்சி தேர்வுக்கு தயாராகி வந்துள்ளார். கடைசியாக நவம்பர் 8-ல் உமரிடம் அவரது குடும்பத்தார் போனில் பேசியுள்ளனர். இதன் பிறகு உமரின் செல்போன் அணைக்கப்பட்டு இருந்துள்ளது.
உமர் அவரது நண்பர் முஜம்மில் ஆகிய இருவரும் பணியாற்றிய பரிதாபாத் அல் பலா பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியில் டெல்லி சிறப்பு படை மற்றும் என்ஐஏ அதிகாரிகள் நேற்று சுமார் இரண்டரை மணி நேரம் சோதனை நடத்தினர். இதிலும் சில முக்கியத் தடயங்கள் கிடைத்துள்ளன.














