‘முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
காவிரியில் மேகேதாட்டு அணையால் தமிழகத்துக்குப் பாதிப்பு இல்லை என்று கர்நாடக முதல்வர் கூறியிருப்பது கேலிக்கூத்தாக உள்ளது. கர்நாடக முதல்வரின் கருத்து தமிழகத்தைப் பாலைவனமாக்க வழிவகுக்கும். இதன்மூலம், உபரி நீரையும் தமிழகத்துக்கு தரக்கூடாது என்ற கர்நாடக அரசின் தீய எண்ணம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
மேகேதாட்டு அணையை கர்நாடக அரசு கட்டினால், தமிழகத்துக்கு வரும் உபரி நீரும் நின்றுவிடும். இந்தத் திட்டம் கர்நாடகத்துக்கு மட்டும்தான் பயனளிக்கும். எனவே, மேகேதாட்டு அணை திட்டத்தால் தமிழகத்துக்கு பாதிப்பு இல்லை என்ற கூற்று கடும் கண்டனத்துக்குரியது. இதுகுறித்து திமுக அரசு வாய் திறக்காமல் இருப்பது ஏன்?
உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள மேகேதாட்டு அணை குறித்து உண்மைக்குப் புறம்பான கருத்துகள் கூறுவதை கர்நாடக முதல்வர் இனியாவது நிறுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.














