டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்தனர். அவர்களுடைய உடல்கள் எல்என்ஜேபி மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் உயிரிழந்தோரின் குடும்பத்தார் நேற்று காலை முதல் மருத்துவமனை வாயிலில் கவலை தோய்ந்த முகத்துடன் அமர்ந்திருந்தனர். மருத்துவமனையிலுள்ள சவக்கிடங்குக்கு அதிக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஏராளமான போலீஸாரும் மருத்துவமனையில் குவிக்கப்பட்டிருந்தனர். உயிரிழந்தோரின் உடல்கள் எப்போது தங்களுக்குக் கிடைக்கும் என்ற தகவலுக்காக மருத்துவமனையில் அவர்கள் அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருந்தனர்.
சவக்கிடங்கில் பணியாற்றும் மருத்துவமனை ஊழியர் ஒருவர் கூறும்போது, “சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ள இறந்தவர்களின் உடல்களைப் பார்க்கவே பயங்கரமாக உள்ளது. அடையாளம் கண்டுபிடிக்க முடியாத நிலையில் சடலங்கள் உள்ளன. சில சடலங்கள் வெறும் சதைக் குவியல்களாக உள்ளன’’ என்றார்.














