டெல்லி செங்கோட்டை அருகே நேற்று முன்தினம் நடந்த கார் வெடிப்பு சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கார் வெடித்ததில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 13-ஆக உயர்ந்துள்ளது. மேலும் படுகாயமடைந்த 20-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் இறந்த 5 ஆண்களைச் சேர்ந்த 5 குடும்பங்களின் எதிர்காலக் கனவுகள் கலைந்து போய்விட்டது. இறந்தவர்களில் பிஹாரை சேர்ந்த கார் டிரைவர் பங்கஜ் சைனியும்(22) ஒருவர். இவர் சாந்தினி சவுக் பகுதியில் ஒரு பயணியை இறக்கிவிட்டு வரும்போது இந்த குண்டுவெடிப்பில் சிக்கி உயிரிழந்தார். பங்கஜ் சைனியின் தந்தை இதுகுறித்து கூறும்போது, “பயணியை இறக்கிவிட்டு பங்கஜ் தனது காரில் வரும்போதுதான் இந்த குண்டுவெடிப்பு நடந்துள்ளது. எங்கள் குடும்பத்தின் ஒரே நம்பிக்கை பங்கஜ்தான். அவரை இழந்து எங்களால் இருக்கவே முடியாது. இந்த சம்பவத்துக்கு நீதி கிடைக்கவேண்டும்’’ என்றார்.
டெல்லி போக்குவரத்துக் கழகத்தில் பேருந்து நடத்துநராக இருந்த அசோக் குமார் என்பவரும் இதில் உயிரிழந்தார். இதுகுறித்து அசோக் குமாரின் உறவினர் பப்பு என்பவர் கூறும்போது, “8 பேர் கொண்ட குடும்பத்தில் இவர் மட்டுமே ஊதியம் ஈட்டுகிறார். இனி அந்தக் குடும்பத்துக்கு யார்தான் பாதுகாப்பு? தனது குடும்ப பாரத்தை தனியாக சுமந்தவர் அசோக் குமார். இவரது தாயார் சோம்வதி, தனது மூத்த மகனுடன் சொந்த ஊரில் வசிக்கிறார். ஊதியம் போதாததால் இரவு நேரத்தில் செக்யூரிட்டியாகவும் பணியாற்றி வந்தார் அசோக் குமார். அவர்களது எதிர்காலம் இனி கேள்விக்குறிதான்’’ என்றார்.
22 வயதான நோமன் என்பவரும் இந்த குண்டுவெடிப்பில் தனது உயிரை பறிகொடுத்துள்ளார். இவர் சாந்தினி சவுக் பகுதியில் அழகு சாதனப் பொருட்களை தனது கடைக்காக வாங்க வந்தபோதுதான் குண்டுவெடிப்பில் சிக்கி உயிரிழந்தார். நோமனின் மாமா ஃபர்ஹான் கூறும்போது, “நோமனின் உயிரிழப்பு அவரது குடும்பத்தைச் சிதைத்துவிட்டது. எங்கள் மகனை இழந்துவிட்டோம். அவர் கடின உழைப்பாளி. இந்த விஷயத்தில் அரசு ஏதாவது செய்யவேண்டும். ஆனால், இந்த விஷயத்தில் நடவடிக்கை எடுக்க அவர்களுக்கு தைரியம் இல்லை’’ என்றார்
இந்த சம்பவத்தில் 34 வயதான மருந்துக் கடை உரிமையாளர் அமர் கட்டாரியாவும் உயிரிழந்துவிட்டார். சம்பவம் அறிந்ததும் அவரது தந்தை,
லோக் நாயக் மருத்துவமனை வாயிலில் கதறி அழுதது பார்ப்போர் நெஞ்சை உருக வைத்தது. மருந்துக் கடையிலிருந்து அமர் கட்டாரியா வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளது. அமர் கட்டாரியாதான் அவரது வீட்டுக்காக உழைத்து வந்த ஒரே நபர் என்பது குறிப்பிடத்தக்கது.
உத்தர பிரதேச மாநிலம் ஷ்ராவஸ்தி பகுதியைச் சேர்ந்த தினேஷ் குமார் மிஸ்ராவும் உயிரிழந்தவர்களில் ஒருவர். திருமண அழைப்பிதழ் விற்பனை செய்யும் கடையில் அவர் பணியாற்றி வந்தார். அவருக்கு மனைவி, 3 குழந்தைகள் உள்ளனர். இதுகுறித்து அவரது மனைவி ரீனா கூறும்போது, “என் கணவர் உயிரிழந்ததால் நாங்கள் அனைத்தையும் இழந்துவிட்டோம். எங்கள் வாழ்க்கை போய்விட்டது. இந்த செய்தியை டி.வி.யில் பார்த்ததும் எனது கணவரின் தந்தை புரே, எனக்குத் தகவல் தெரிவித்தார். நான் தினேஷுக்கு போன் செய்தபோது அவர் எடுக்கவில்லை. பின்னர்தான் இந்த சம்பவத்தில் அவர் உயிரிழந்ததை அறிந்துகொண்டேன்’’ என்றார்.














