தடாகக் கட்சி தலைவர் மீது ‘டெல்லி மக்கள்’ அவ்வளவு திருப்தி இல்லாமல் இருக்கிறார்களாம். மாளிகைக் கட்சியுடன் கூட்டணி இல்லை என்றபோதும் கடந்த மக்களவைத் தேர்தல் சமயத்தில் தடாகக் கட்சியை பேசும்படியான இடத்தில் தடபுடலாய் வைத்திருந் தாராம் ‘பிரதர் மவுன்ட்’ தலைவர்.
ஆனால், இப்போது மாளிகைக் கட்சியுடன் கூட்டணி அமைந்துவிட்ட நிலையில் புதுத் தெம்போடு நிற்க வேண்டிய கட்சி, அதற்கு மாறாக பழைய தெம்பையும் இழந்து சுரத்தில்லாமல் இருக்கிறதாம். ஏன் இந்தத் தேக்கம் என மத்திய தலைமை விசாரணை நடத்திய போது, “இப்போது ஜில்லா அளவில் பொறுப்பில் இருப்பவர்களில் பெரும்பகுதியினர் அவரால் நியமிக்கப்பட்டவர்கள். அதனால் எங்களுக்கு போதிய ஒத்துழைப்பு இல்லை” என்று ஒரு காரணத்தைச் சொன்னதாம் சிட்டிங் தலைவர் தரப்பு.
இந்த நொண்டிச் சாக்கை எல்லாம் ரசிக்காத மத்தியப் புள்ளிகள், ‘பிரதர் மவுன்ட்’ தலைவரை மாற்ற வேண்டும் என முன்பு பிடிவாதமாக அழுத்தம் கொடுத்த தமிழகத்தின் ‘சங்க’ப் புள்ளிகள் மீது கடும் அதிருப்தியில் இருக்கிறார்களாம்.
இத்தகைய மந்த நிலை நீடித்தால் இந்தத் தேர்தலில் நாம் நினைத்ததை முடிப்பது சிரமம் என கவலை கொண்டிருக்கும் மத்திய புள்ளிகள், மீண்டும் ‘பிரதர் மவுன்ட்’ தலைவரிடமே பொறுப்பை ஒப்படைத்து தேர்தலைச் சந்திக்கலாமா என்றும் ஒரு சுற்று ஆலோசனை நடத்தி இருக்கிறார்களாம்.














