தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ள வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணியை (எஸ்ஐஆர்) கைவிடக் கோரி தமிழகம் முழுவதும் திமுக கூட்டணி நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தியது. புதுக்கோட்டையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக, இந்திய கம்யூனிஸ்ட், விசிக, மதிமுக, தவாக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்ட நிலையில், தேசியக் கட்சியான காங்கிரஸ் சார்பில் யாரும் பங்கேற்காமல் புறக்கணித்தது கூட்டணிக் கட்சியினரிடையே விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து நம்மிடம் பேசிய திமுக ஐடி விங்க் அணியின் தொகுதி ஒருங்கிணைப்பாளர் அறந்தாங்கி பி.செந்தில்வேலன், “இந்த ஆர்ப்பாட்டத்தில் கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளும் பங்கேற்க வேண்டும் என திமுக அழைப்பு விடுத்து, 2 தினங்களுக்கு முன்பு ஆலோசனை நடத்தப்பட்டது. ஆனால், ஏனோ ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொள்ளவில்லை.
இதனால், புதுக்கோட்டை மாவட்டத்தில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி இல்லையோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. கடந்த தேர்தலில் அறந்தாங்கி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரை வெற்றி பெறச்செய்தது திமுக தான் என்பதை அக்கட்சியினர் மறந்துவிடக்கூடாது” என்றார்.
ஆனால் காங்கிரஸ் மூத்த நிர்வாகிகளோ, “ஆர்ப்பாட்டம் நடத்துவது தொடர்பாக எங்களுக்கு எந்த தகவலையும் திமுக-வினர் தெரிவிக்கவில்லை. முறையான அழைப்பு இல்லாமல் எப்படி கலந்து கொள்ள முடியும்? மேலும், புதுக்கோட்டை மாவட்டத்துக்கு அரசு விழாவில் பங்கேற்பதற்காக முதல்வர் வந்தபோது நாங்கள் கலந்து கொள்வது குறித்து திமுக மூத்த நிர்வாகிகளிடம் கேட்டபோது, அரசு விழாவில் காங்கிரஸ் பங்கேற்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை என்று கூறிவிட்டார்கள். இப்படியெல்லாம் பேசினால் எப்படி கலந்துகொள்ள முடியும்?” என்றனர்.
எஸ்ஐஆர் விவகாரத்தை முதலில் கையில் எடுத்த காங்கிரஸ் கட்சி, அதே எஸ்ஐஆருக்கு எதிராக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்காதது கூட்டணிக்குள் புகைச்சலை ஏற்படுத்தி உள்ளது.














