எனக்கு டப்பிங்கில் அதிக ஆர்வம் இருந்தது. ஆரூர்தாஸ் ஐயா மற்றவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும் என்று முனைப்பாகச் சொல்லிக் கொடுப்பார். ‘இந்த இடத்துல உதடு ஒட்டாம பேசு, இந்த இடத்துல ‘இம்’-மை அரை சவுண்ட் வச்சுக்கோ, இந்த இடத்துல ஏத்திப் பேசணும், இங்க வார்த்தையை இறக்கிப் பேசணும்’என்று சொல்லித்தருவார். அதே போல மருதபரணி அவர்கள் ‘காஷ்மீரம்’ என்ற மலையாளப் படத்துக்கு தமிழ் டப்பிங் செய்தார். அது ‘ரோஜா’ படம் மாதிரியான கதை.
சுரேஷ் கோபி ஹீரோவாக நடித்த அதில் தேஜ் சப்ரூ என்ற இந்தி நடிகர் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அவருக்கு நான் டப்பிங் பேச வேண்டும். மலையாளத்தில் இந்தி மொழியிலேயே வசனங்களை வைத்திருந்தார்கள். தமிழ் டப்பிங்கில் அவர் பேச்சுக்கு இடையில் தமிழில் பேச வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் விரும்பினார்கள்.
அது தொடர்பாக அவர்களுக்குள் ஆலோசனை நடந்தது. பிறகு மருதபரணி சார், “அவரோட இந்தி பேச்சுக்கு இடையில தமிழ்ல பேசற மாதிரி வச்சுக்கலாம்” என்றதும் தயாரிப்பாளர்கள், “வாய்ஸ் வித்தியாசம் தெரிஞ்சிருமே?” என்று கேட்டார்கள். உடனே, “அது தெரியாம பண்றது என் பிரச்சினை, பார்த்துக்கிறேன்” என்று சொல்லிவிட்டு என்னைப் பார்த்துக் கண்ணடித்தார். நான் அதைப் புரிந்துகொண்டு உள்ளே போய் அந்தக் காட்சிக்குப் பேசினேன்.
அவருடைய இந்திப் பேச்சுக்கு இடையில், “உன்கு பைசா இல்லடா, புல்லட் கொடுக்றேன்.. புல்லட்” என்று பேசியதும் தயாரிப்பாளர்கள் வியந்தார்கள். “என்னங்க தேஜ் சப்ரூ வாய்ஸ் மாதிரியே பேசிட்டாரு” என்றார்கள். இந்தப் படத்தை தணிக்கையில் பார்த்த அதிகாரிகள், “எப்படி இந்தி நடிகரை கூட்டிட்டு வந்து தமிழ்ப் பேச வச்சீங்க?” என்று கேட்டதாக மருதபரணி என்னிடம் சொன்னார்.
இதே போல, இயக்குநர் சொர்ணவேல், இந்திய தேசிய ராணுவத்தில் தமிழர்களின் பங்கை உணர்த்தும் ‘ஐ.என்.ஏ’ என்ற ஆவணப்படத்தை இயக்கி இருந்தார். அக்காலகட்டத்தில் எனக்கு வருமானம் அதிகம் இல்லை என்பதால் அதில் டப்பிங் பேசுவதற்கு ஒரு தொகையைக் கேட்டேன். அவர் ஒன்றும் சொல்லாமல் சென்று விட்டார். ஒரு நாள் ராஜலட்சுமி டப்பிங் தியேட்டரில் பேசிக் கொண்டிருந்த போது, சொர்ணவேல் பற்றி விசாரித்தேன். “நாங்கள் அவருக்கு சர்வீஸாகத்தான் பண்ணியிருக்கோம். பணம் வாங்கவில்லை” என்று சொன்னார்கள்.
“அப்படி அவர் என்ன பண்ணியிருக்கார்?” என்று கேட்டதும், நேதாஜியின் இந்த தேசிய ராணுவம் பற்றி ஆவணப்படம் எடுத்திருக்கிறார் என்றார்கள். எனக்கு நேதாஜியை அதிகம் பிடிக்கும் என்பதால் உடனடியாக அவரை வரச் சொல்லி, குர்பக்சிங் தில்லான் என்பவருக்கு டப்பிங் பேசினேன்.
தில்லானுக்கு அப்போதே 80 வயதுக்கு மேல். குரலில் நடுக்கம் இருந்தது. நானும் அவரைப் போலவே பேசிக் காண்பித்ததை சொர்ணவேல் ரொம்ப ரசித்தார். இதுபோன்ற சவாலான விஷயங்களை இறையருளாலும் எனக்கு கற்றுக் கொடுத்தவர்களின் ஆசியாலும் டப்பிங்கில் செய்திருக்கிறேன்.
என் நண்பர்கள் வட்டத்தில் ஒருவனாக கே.ரவி இருந்தான். எட்டாவது படிக்கும் வரை காரில்தான் பள்ளிக்கு வருவான், போவான்! அவன் கோடீஸ்வரர் மகனோ, லட்சாதிபதி மகனோ அல்ல. வீட்டில் இருந்து பையை எடுத்துக்கொண்டு வெளியே வருவான். மின் கம்பத்தின் கீழே நின்று கொள்வான்.
மேலே ஒயர் போகும். கற்பனையிலேயே காரை இயக்குவான். அவனுடைய கார் கற்பனையானது. கற்பனை கரண்ட்டில் ஓடுவது. வாயால் சத்தம் கொடுத்துக்கொண்டு, கற்பனை சாவியை திருகி ஸ்டார்ட் செய்வான். பிறகு “என்ன ஸ்டார்ட் ஆக மாட்டேங்கற? இன்னைக்கு என்ன பிரச்சினை உனக்கு?” என்று அதனிடம் பேசுவான்.
மேலே செல்கிற ஒயருக்கு கீழேயே, டர்ர்ர்ர் என்று சத்தம் கொடுத்தபடியே ஓடுவான். இடது, வலது பக்கம் திரும்ப வேண்டும் என்றால், கைகளால் சிக்னல் கொடுத்த பின் செல்வான். இதற்கிடையே ஹாரனும் அடித்துக்கொள்வான். அப்படியே ஸ்கூலுக்கு வந்ததும் வண்டியை ஆஃப் செய்வான். பிறகு கற்பனைக்கார் கதவை அடைத்துவிட்டு, இல்லாத சாவியை இருப்பது போல பையில் போட்டுக்கொண்டு வந்து விடுவான். ஸ்கூலில் ஆர்.எம்.எஸ். உதயபாஸ்கரன் என்பதுதான் என் முழுப்பெயர்.
இதைச் சுருக்கி என்னை ‘ஆர்மி’ என்று அழைப்பான் ரவி. இந்தியன் ஆர்மி என்ற பெயர் போன்று தோன்றியதால் எனக்கும் ஒரு கம்பீரம் வந்து விடும். எல்லோரும் அப்படி கூப்பிட ஆரம்பித்ததும் வகுப்பறையில் ஒரு நாள் சிரித்து விட்டோம். அப்போது ‘நயினார்’ என்ற ஆசிரியர் இருந்தார். அவர் நாகர்கோவில் பக்கம் இருந்து வந்தவர். அவர் எங்களை அடிப்பதற்கு எங்களிடமே ஆடாதொடை கம்பு வேண்டும் என்று கேட்பார். நாங்கள் கொடுக்க வேண்டும். அதை பத்திரமாக வைத்திருப்பார். யாராவது சேட்டை செய்தால், அந்தக் கம்பால் அடி உண்டு.
மந்திரவாத வேலைகள் தெரியும் என்பது போல ரவி எங்களை பயமுறுத்தி வைத்திருந்தான். அவன் பைக்குள் ஒரு நாகலிங்கப்பூவை எங்கிருந்தாவது எடுத்து வைத்திருப்பான். பக்கத்தில் இருப்பவர்கள் முன், மெதுவாக பையை திறந்து அந்தப்பூவைப் பார்ப்பான், “நாகப்பா… சீறாதே, ராத்திரி உன்னை அவிழ்த்து விடறேன்.
நீ போய் அவங்களை என்ன பண்ணணுமோ, பண்ணு. இப்ப அமைதியா இரு” என்று சீரியஸாக முகத்தை வைத்துக்கொண்டு சொல்வான். அருகில் இருக்கிற எல்லோருக்கும் பயம் வந்து விடும். நாகம் ஏதும் செய்துவிடுமோ என்ற பயத்திலேயே இருப்போம். ராத்திரி எதைப் பார்த்தாலும் பாம்பு போலவே தெரியும். இப்படி தூங்காமல் பல இரவுகள் (அப்பா- அம்மாவுக்கு தெரியாமல்) கழிந்ததுண்டு.
குங்குமப்பொட்டு வைத்துக்கொண்டு வருவான். அதை தொட்டு, யாருக்காவது வைத்து விட்டால் ஏதும் ஆகிவிடும் என்று பயமுறுத்தி வைத்திருந்தான். ஒரு நாள் ஸ்கூல் விட்டதும் என்னை விரட்டிக்கொண்டு வந்தான். குங்குமத்தை என் மீது தடவுவதற்காக… அவன் கையை நீட்டிக்கொண்டே விரட்டி வருவதை பார்த்து பயந்து ஓடினேன். வேக வேகமாக ஓடினேன். எவ்வளவு தூரம் ஓடுவது? ஒரு கட்டத்தில் முடியாமல் மூச்சிரைக்க நின்று விட்டேன்.
“வாடா… வந்து தொடுறா, தொடுறா?” என்று அவனை அழைத்தேன். அவன் வரவில்லை! பிறகுதான் எனக்கு தெரிந்தது. அவன் இவ்வளவு நாட்களாக எங்களை ஏமாற்றி இருக்கிறான் என்று. பிறகு அவனை செம அடி அடித்தேன்! “ஆர்மி அடிக்காதடா… வெளயாட்டுக்கு பண்ணேன்டா” என்று அழுதவன் அன்றிலிருந்து நாகலிங்கப்பூ, குங்குமப்பொட்டு மேட்டர்களை விட்டு விட்டான்.














