உ.பி.யில் பள்ளி, கல்லூரிகளில் ‘வந்தே மாதரம்’ தேசிய பாடலை பாடுவது கட்டாயமாக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.
சர்தார் வல்லபபாய் படேலின் 150-வது பிறந்த நாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக உ.பி.யின் கோரக்பூரில் தேசிய ஒற்றுமை தின பேரணி நேற்று நடைபெற்றது. இதில் உ.பி. முதல்வர் ஆதித்யநாத் பங்கேற்று பேசியதாவது:
சர்தார் வல்லபபாய் படேல், நமது விவாதங்களின் ஒரு பகுதியாக மாற வேண்டும். உ.பி. முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் ‘வந்தே மாதரம்’ தேசிய பாடல் பாடுவது கட்டாயமாக்கப்படும். இதன்மூலம் உ.பி.யில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் பாரத மாதா மற்றும் மாத்ருபூமி மீதான மரியாதை உணர்வு அதிகரிக்கும்.
தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டை பலவீனப்படுத்தும் காரணிகளை நாம் அடையாளம் காண வேண்டும். எதிர்காலத்தில் இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு சவால் விடும் ஜின்னாக்கள் எவரும் உருவாகாத வகையில் அவர்களை திறம்பட எதிர்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
கோரக்பூர் கோரக்நாத் கோயில் வளாகத்தில் நடைபெற்ற மக்கள் தரிசனம் நிகழ்ச்சியில் மக்களின் குறைகளை ஆதித்யநாத் கேட்டறிந்தார். அப்போது பெறப்பட்ட மனுக்களுக்கு உரிய தீர்வு காண்பதாக உறுதி அளித்தார்.














