மக்களவை, மாநில சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்தக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இந்த மனு குறித்து பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
மக்களவை, மாநில சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் நாரி சக்தி வந்தன் மசோதா கடந்த 2023-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. ஆனால் இந்த சட்டம் இதுவரை அமல்படுத்தப்படவில்லை.
நாடு முழுவதும் வரும் 2027-ம் ஆண்டு பிப்ரவரியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. இதன்பிறகு மக்கள் தொகையின் அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை செய்யப்படும்.
புதிய தொகுதிகளின் அடிப்படையில் 33 சதவீத மகளிர் இடஒதுக்கீடு அமல் செய்யப்படும். இதன்படி வரும் 2029-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது மகளிர் இடஒதுக்கீடு அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சூழலில் காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெயா தாக்குர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில், “நாட்டின் மக்கள் தொகையில் 50 சதவீதம் பேர் பெண்கள். ஆனால் மக்களவை, சட்டப்பேரவைகளில் 4 சதவீத பெண் பிரதிநிதிகள் மட்டுமே உள்ளனர். 33 சதவீத மகளிர் இடஒதுக்கீடு சட்டம் எப்போது அமலுக்கு வரும் என்பது யாருக்கும் தெரியவில்லை. இந்த சட்டத்தை உடனடியாக அமல் செய்ய வேண்டும்’’ என்று கோரப்பட்டு உள்ளது.
நீதிபதிகள் நாகரத்னா, மகாதேவன் அமர்வு முன்பு நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது: இந்திய மக்கள் தொகையில் பாதி அளவுக்கு பெண்கள் உள்ளனர். ஆனால் மக்களவை, சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை. இந்தியாவின் மிகப்பெரிய சிறுபான்மை சமூகமாக பெண்கள் உள்ளனர். இடஒதுக்கீட்டை அமல் செய்யக் கோரி நீதிமன்றத்தை அவர்கள் நாடும் சூழல் இருக்கிறது. மத்திய அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றம் தலையிட முடியாது. எனவே இந்த மனு குறித்து மத்திய அரசு விரிவான பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.
நீதிபதிகளின் உத்தரவின்படி மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. மத்திய அரசு பதில் மனுவை தாக்கல் செய்த பிறகு தொடர்ந்து
விசாரணை நடத்தப்படும்.














