எஸ்ஐஆர் விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் திமுக தவறான தகவலை பதிய வைத்தால் அதை சரிசெய்யவே அதிமுக வழக்கில் இணைந்துள்ளது என்று கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் பழனிசாமி நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: கோவையில் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். திமுக ஆட்சியில் பெண்கள், மாணவிகள், சிறுமிகளுக்கு பாதுகாப்பு இல்லை. திமுக ஆட்சியில் பாலியல் வன்கொடுமைகள் சர்வசாதாரணமாக நடக்கின்றன. சட்டம் ஒழுங்கு முற்றிலுமாக சீர்குலைந்துள்ளது. திமுக ஆட்சியில் 6,999 சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாகவும், அதற்கு ரூ.104 கோடி நிவாரணம் கொடுத்ததாகவும் திமுகவின் சமூக நலத்துறை அமைச்சரே பெருமையாகப் பேசியுள்ளார். ஒரு திறமையற்ற, பொம்மை முதல்வரிடம் காவல்துறை இருப்பதால், இப்படியான பாலியல் வன்கொடுமைகள் நடக்கின்றன.
21 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நடத்தப்படுகிறது. இதற்கு முன்பு 8 முறை இந்த திருத்தம் செய்யப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியலில் இறந்தவர்கள், வீடு மாறி சென்றவர்கள் பெயர்கள் அதிகளவில் இடம்பெற்றுள்ளது. இதுபோல உள்ளவர்களை நீக்கி, தகுதியானவர்களை இடம்பெற செய்வதே எஸ்ஐஆர்.
ஆனால், திமுகவும், அதன் கூட்டணிக் கட்சிகளும் எஸ்ஐஆர் என்றாலே அலறுகிறார்கள். காலக்கெடு போதாது என்கிறார்கள். இதற்காக பிஎல்ஓக்கள் நியமிக்கப்பட்டுள்ளனர், ஒரு மாதம் காலக்கெடு வழங்கப்பட்டுள்ளது. 300 வீடுகள் இருக்கும் ஒரு பாகத்தில் வாக்காளர் படிவம் கொடுக்க 8 நாட்கள் போதும். எனவே இதில் காலதாமதம் ஏற்பட வாய்ப்பே இல்லை. எஸ்.ஐ.ஆர் குறித்து தவறான செய்தி பரவி வருகிறது. தகுதியான வாக்காளர்கள் பட்டியலில் இடம்பெற வேண்டும் என்பதே எஸ்.ஐ.ஆரின் நோக்கம். இறந்தவர்கள், வீடு மாறி சென்றவர்களை நீக்கக்கூடாது என திமுகவினர் சொல்கின்றனர். ஏனெனில் தகுதியானவர்கள் மட்டும் இடம்பெற்றால் கள்ள ஓட்டு போடமுடியாது என திமுகவினர் இதனை எதிர்க்கிறார்கள்.
எஸ்ஐஆரை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடர்ந்துள்ளது. விசாரணையின்போது நீதிமன்றத்தில் திமுக தவறான தகவலை பதிவு செய்தால் அதை செய்யவே வழக்கில் அதிமுகவும் இணைந்துள்ளது. நீதிமன்றத்தில் தவறான தகவலை தெரிவிக்காமல் இருக்க திமுகவுக்கு ‘செக்’வைக்கவே நாங்களும் வழக்கில் இணைந்துள்ளோம். திமுக தவறான தகவல்களை சொன்னால், எங்கள் தரப்பில் சரியான தகவல்களை நீதிமன்றத்தில் தெரிவிப்போம்.
சென்னையில் கள்ள ஓட்டு போட முயன்ற திமுக நிர்வாகியை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பிடித்துக்கொடுத்தார். வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் தவறு இருந்தால் சுட்டிக்காட்டுங்கள். தகுதியானவர்கள் வாக்காளர் பட்டியலில் இடம்பெற வேண்டும் என்பதற்காகவே நாங்கள் எஸ்ஐஆரை ஆதரிக்கிறோம்.
என் குடும்பத்தினர் யாரும் அரசியலில் தலையிடுவது இல்லை. என் மகனையோ, மருமகனையோ அதிமுக ஆட்சியின்போதோ அல்லது கட்சியிலோ யாராவது பார்த்திருக்கிறீர்களா? இதற்கு முன் கட்சியிலிருந்து விலகியவர்கள் குடும்ப அரசியல் குற்றச்சாட்டை என் மீது கூறினார்களா? என் மீது வேறு குற்றச்சாட்டுகள் கூற முடியாததால் குடும்ப அரசியல் என்று செங்கோட்டையன் கூறுகிறார். தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அதிமுகதான் தலைமை ஏற்கும் என்று அமித்ஷா ஏற்கெனவே தெளிவுபடுத்திவிட்டார். முதல்வர் வேட்பாளர் இபிஎஸ் என்றும் பாஜக கூறிவிட்டது. இவ்வாறு அவர் கூறினார்.














