மதுரை: தூத்துக்குடி மாவட்டம் சாத்தான் குளத்தைச் சேர்ந்தவர் ஜெயராஜ். இவரது மகன் பெனிக்ஸ். இவர்கள் சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்தனர். 2020 ஜூன் மாதம் கரோனா தொற்று பரவல் நேரத்தில் ஊரடங்கு கட்டுப்பாட்டு நேரம் தாண்டி கடையைத் திறந்து வைத்ததாகக் கூறி இருவரையும் விசாரணைக்காக போலீஸார் காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். அங்கு இருவரையும் போலீஸார் கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் இருவரும் உயிரிழந்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் மற்றும் சிறப்பு சார்பு ஆய்வாளர், காவலர்கள் என மொத்தம் 9 பேரை சிபிஐ கைது செய்தது. மதுரை மத்திய சிறையில் அவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கு மதுரை முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் உயிரிழந்த ஜெயராஜின் மனைவி ஜெயராணி, இந்த வழக்கு விசாரணையை விரைவில் முடிக்க உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார். இதை விசாரித்த உயர் நீதிமன்றம் 6 மாதத்தில் விசாரணையை முடிக்க விசாரணை நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டது.
அதன்படி விசாரணை நடைபெற்று வந்த நிலையில், விசாரணையை முடிக்க மேலும் 6 மாதம் காலஅவகாசம் கேட்டு விசாரணை நீதிமன்றம் சார்பில் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிபதி கே.முரளிசங்கர் விசாரித்தார். பின்னர், சிபிஐ தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை நீதிபதி தள்ளிவைத்தார்.














