வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பார்ட்டி’ திரைப்படம் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
2018ம் ஆண்டு அனைத்து பணிகளும் முடிவடைந்து வெளியீட்டுக்கு தயாரான படம் ‘பார்ட்டி’. ஆனால் ஃபிஜி தீவில் இருந்து வரக்கூடிய சான்றிதழ்கள் கிடைக்க தாமதமானால் படம் இதுவரை வெளியாகவில்லை. தற்போது இப்பிரச்சினை முடிவடைந்து அடுத்த ஆண்டு பிப்ரவரியில் வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான ஏற்பாடுகளை தயாரிப்பாளர் சிவா மற்றும் இயக்குநர் வெங்கட் பிரபு எடுத்து வருகிறார்கள்.
டி.சிவா தயாரித்த இந்தப் படத்தை வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். முழுக்க ஃபிஜி தீவில் படமாக்கப்பட்ட இதில் சத்ய ராஜ், ஜெய், ஷாம், ஜெயராம், நாசர், ரம்யா கிருஷ்ணன், நிவேதா பெத்துராஜ், ரெஜினா, சஞ்சிதா ஷெட்டி என பெரிய பட்டாளமே நடித்திருந்தது. இசையமைப்பாளராக பிரேம்ஜி பணிபுரிந்துள்ளார்.
இந்த ஆண்டு எப்படி ‘மத கஜ ராஜா’ பெரிய வெற்றி பெற்றதோ அதேபோல், அடுத்த ஆண்டு ‘பார்ட்டி’ வெற்றி பெறும் என்று படக்குழு நம்பிக்கையில் இருக்கிறது. சமீபத்தில் தனது 50-வது பிறந்த நாளைக் கொண்டாடினார் வெங்கட் பிரபு. இதில் திரையுலகினர் பலரும் கலந்துக் கொண்டு வாழ்த்து தெரிவித்தார்கள். இந்த நாளில் தான் ‘பார்ட்டி’ படத்தினை வெளியிடக் கூடிய முனைப்பைத் தொடங்கியிருக்கிறார்கள்.














