சத்தீஸ்கரின் ராய்கர் மாவட்டத்தில் தனியார் நிலக்கரி சுரங்கம் அமைப்பது தொடர்பான கருத்து கேட்பு கூட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என ஆயிரக்கணக்கான பழங்குடியின மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சத்தீஸ்கரின் ராய்கர் மாவட்டத்தில் தரம்ஜாய்கர் என்ற பகுதி உள்ளது. இங்குள்ள புரங்கா கிராமம் அருகே அதானி நிறுவனம் நிலக்கரி சுரங்கம் அமைக்கவுள்ளது. இதற்கு இப்பகுதியைச் சேர்ந்த பழங்குடியின மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதால், அவர்களிடம் கருத்து கேட்கும் கூட்டத்துக்கு நாளை ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த கூட்டத்தை ரத்து செய்யக்கோரி, தரம்ஜாய்கர் பகுதியில் உள்ள 12 கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் ராய்கர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வெளியே உள்ள சாலையோரம் அமர்ந்து கடந்த வியாழன் இரவு முதல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் ஆண்கள், பெண்கள், முதியோர்கள், கைக் குழந்தைகள் ஆகியோர் திறந்த வெளியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சுரங்க பணிகள் தொடங்கினால், எங்களது வனம், நீர் வளம், நிலம் ஆகியவை அழியும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஒருவர் தெரிவித்தார். அதிகாரிகள் யாரையும் கிராமத்துக்குள் நுழைய அனுமதிக்க மாட்டோம் என போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.
ராய்கர் மாவட்ட ஆட்சியர் மயாங் சதுர்வேதி கூறுகையில், ‘‘மக்களின் பிரச்சினைகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்ப்பதற்கு மாநில சுற்றுச்சூழல் வாரிய அறிவுறுத்தலின்படி இந்த கருத்து கேட்பு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் சுற்றுச்சூழல் மற்றும் வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும்’’ என்றார்.
பழங்குடியின மக்கள் போராட்டத்தை முன்னிட்டு, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ்களும் நிறுத்தப்பட்டுள்ளன. சுதந்திரத்துக்குப்பின் இப்பகுதியில் பழங்குடியினர் நடத்தும் மிகப் பெரிய போராட்டம் இது என கூறப்படுகிறது.














