சேலம் மாவட்டத்தை சேர்ந்த அருண்ராஜ், எம்பிபிஎஸ் பட்டம் பெற்ற மருத்துவர். டிஎன்பிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்று கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதியில் அரசு மருத்துவ அதிகாரியாக பணியாற்றி உள்ளார். அதனைத் தொடர்ந்து, யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்று ஐஆர்எஸ் அதிகாரியாக, இந்திய வருவாய் துறையில் தமிழ்நாடு, பிஹார் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பணியாற்றியவர். கடந்த மே மாதம் விருப்ப ஓய்வு பெற்ற அருண்ராஜ், ஜூன் மாதம் தவெகவில் இணைந்தார். கட்சியின் கொள்கை பரப்பு பொதுச்செயலாளரான அவரிடம் ‘இந்து தமிழ் திசை’க்காக பேசினோம். அவர் அளித்த பேட்டியிலிருந்து…
கரூர் சம்பவத்தில் இருந்து விஜய் மீண்டு விட்டாரா? தற்போது என்ன மனநிலையில் இருக்கிறார்?
கரூர் சம்பவத்தில் இருந்து விஜய் மீண்டு வந்துவிட்டார். எத்தனை இடர்பாடுகள், தடைகள் வந்தாலும் அதைக் கடந்து செல்ல வேண்டும் என்ற எண்ணம் விஜய்க்கு தற்போது அதிகமாகிவிட்டது. பொதுக்குழு கூட்டத்தில் விஜய் பேசும் போதே கவனித்திருப்பீர்கள். அவரது உடல்மொழி, பேசும் தொனி என அனைத்திலும், ‘நிறை குடம் தளும்பாது’ என்ற பழமொழிக்கு ஏற்ப மனதளவில் இன்னும் அவர் வலுவாகி விட்டார்.
விஜய் கரூர் சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க எது தடையாக இருந்தது?
கரூருக்கு செல்ல வேண்டும் என்பது தான் அவரது விருப்பம். ஆனால், கரூரில் மண்டபம் கிடைப்பதில் எங்களுக்கு உண்மையாகவே சிக்கல் ஏற்பட்டது. 90 சதவீத மண்டப உரிமையாளர்கள், மண்டபம் கொடுப்பதற்கு தயாராக இல்லை. ஏனென்றால், ஒரு சிலரை அவர்கள் பகைத்து கொள்ள விரும்பாதது தான் காரணம். அதையும் மீறி இரண்டு மண்டபங்களை அடையாளம் கண்டோம். ஆனால், அந்த மண்டபங்களில் சுற்றுச்சுவர் இல்லாமல் இருப்பது உள்ளிட்ட பாதுகாப்பு குறைபாடுகள் இருந்தது. மேலும், காவல்துறையும் 2 மணி நேரம் மட்டும் தான் அனுமதி கொடுத்தார்கள். 41 குடும்பத்தினரை எப்படி 2 மணி நேரத்தில் சந்திப்பது. அதனால், தான் நாங்கள் மாமல்லபுரத்துக்கு அவர்களை அழைத்து வந்தோம்.
பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட ரூ.20 லட்சம் இழப்பீடு தொகையை ஒரு குடும்பம் மட்டும் திருப்பி அனுப்பி விட்டார்களே, ஏன்?
பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் பலரிடம் மாமல்லபுரத்துக்கு செல்ல கூடாது என்பதற்காக, ரூ.30 லட்சம் தருகிறோம். நீங்கள் விஜய்யை சந்திக்க போக வேண்டாம் என சிலர் அவர்களிடம் கூறியுள்ளனர். இன்னும் சிலர், அவர்களை விஜய்யை பார்க்க செல்ல கூடாது என மிரட்டி உள்ளனர். அதையும் மீறி தான் அவர்கள் விஜய்யை சந்திக்க மாமல்லபுரம் வந்திருக்கிறார்கள். அந்த ஒரு குடும்பத்தினர் ஏன் திருப்பி அனுப்பினார்கள் என்று அவர்களிடம் தான் கேட்க வேண்டும்.
கரூர் சம்பவத்துக்கு பிறகு பாஜக – அதிமுக கூட்டணி, தவெகவை அவர்கள் பக்கம் இழுக்க முயற்சிப்பதாக கருதுகிறீர்களா?
கூட்டணி விவகாரத்தில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம். கொள்கை எதிரி யார் என்று நாங்கள் முதல் மாநாட்டிலே அறிவித்திருக்கிறோம். அதில் எந்த சமரசமும் இல்லை. மாற்றமும் இல்லை.
விஜய் தான் முதல்வர் வேட்பாளர். தவெக தலைமையில் தான் கூட்டணி என்ற தீர்மானம் மூலம் அதிமுகவுடன் கூட்டணி இல்லை என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பீர்களா?
மீண்டும் சொல்கிறேன். தவெக தலைவர் முதல் மாநாட்டில் விடுத்த அறிவிப்பும், கடந்த செயற்குழுவில் நாங்கள் என்ன தீர்மானம் நிறைவேற்றினோமோ அதுவும் தான் எங்கள் கட்சியின் நிலைபாடு.
மாநில, மாவட்ட, தொகுதி நிர்வாகிகள் முதல் ஒன்றிய, கிளை, பாக முகவர்கள் வரை வலுவான கட்டமைப்பை வைத்துள்ள திமுகவை வரவுள்ள தேர்தலில் புதிய கட்சியான தவெக எப்படி சமாளிக்கும்?
முதலில் மக்களுக்கு நல்லாட்சி கொடுக்க வேண்டும். அடிப்படையான சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டும். மக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். மக்கள் வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டும். அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும். இதை செய்தால் தான் வாக்களிப்பார்களே தவிர, கட்டமைப்பு இருந்தால் மட்டும் யாரும் வாக்களிக்க மாட்டார்கள். திமுக மீது மக்கள் தற்போது கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள்.
கொள்கையே இல்லாமல் ரசிகர் கூட்டத்தை நம்பி விஜய் அரசியலுக்கு வந்துள்ளதாக விமர்சிக்கிறார்களே?
எங்களை விமர்சிப்பவர்கள் கொள்கை என்ற பெயரில் இன்னும் கொள்ளை அடித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். பெரியார் வாழ்க, அண்ணா வாழ்க என சொல்லிக் கொண்டு, குடும்ப ஆட்சியையும், ஊழலும் செய்து கொண்டிருக்கிறார்கள். பெரியாரும், அண்ணாவும் இதை தான் சொன்னார்களா? புதிய மாற்றத்துக்காக, துணிச்சலான முடிவை எடுத்து திரையுலகில் தனது உச்சத்தை விஜய் விட்டுவிட்டு வந்திருக்கிறார். போகிற போக்கில், கண்ணாடி மாளிகையில் இருந்துகொண்டு கல்லெடுத்து எறிவது போல கொள்கை இல்லாத கட்சி என்று எப்படி கூறலாம்? உண்மையில் கொள்கை இல்லாமல் இருப்பது திமுக தான்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை தவெக எதிர்க்க என்ன காரணம்?
இங்கு பிரச்சினையே வெளிப்படை தன்மை இல்லாதது தான். 2024-ல் இதே வாக்காளர் பட்டியலை வைத்து தானே நாடாளுமன்ற தேர்தல் நடந்தது. பிரதமராக மோடி தேர்வு செய்யப்பட்டார். அப்படி இருக்கையில், இப்போது என்ன அவசரம். வாக்காளர் பட்டியல் திருத்தம் அவசியமானது தான். அதை யாரும் மறுக்கவில்லை. ஆனால், அதை ஏன் அவசர கதியில் செய்ய வேண்டும்.
விஜய்யின் அடுத்தக்கட்ட மக்கள் சந்திப்பு எப்போது?
மக்கள் சந்திப்புக்கான திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகிறது. மக்களை சந்திக்க வேண்டும் என்பதில் விஜய் மிக ஆர்வமாக இருக்கிறார். விரைவில் அறிவிப்பு வெளியாகும்.














