ஐபிஎல் 2026 சீசனில் தோனி விளையாடுகிறார்: உறுதி செய்த சிஎஸ்கே

0
20

எதிர்வரும் ஐபிஎல் 2026-ம் ஆண்டுக்கான சீசனில் மகேந்திர சிங் தோனி விளையாடுவார் என சிஎஸ்கே தரப்பு உறுதி செய்துள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட் என்றாலே பெரும்பாலானவர்களுக்கு சட்டென நினைவுக்கு வரும் அணிகளில் சிஎஸ்கேவும், வீரர்களில் தோனியும் இருக்கலாம். கடந்த 2020-ல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக தோனி அறிவித்தார். அதன் பின்னர் ஐபிஎல் கிரிக்கெட்டில் அவர் தொடர்ந்து விளையாடி வருகிறார்.

இந்தச் சூழலில் கடந்த சில ஐபிஎல் சீசன்கள் தொடங்குவதற்கு முன்னர் ‘தோனி விளையாடுவாரா?’ என்ற கேள்வியும் சேர்ந்து எழுவது உண்டு. இந்நிலையில், 44 வயதான தோனி வரும் ஐபிஎல் சீசனிலும் விளையாடுவது இப்போது உறுதியாகி உள்ளது. “அடுத்த சீசனில் தான் இருப்பேன் என தோனி எங்களிடம் தெரிவித்துள்ளார்” என காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

முதல் ஐபிஎல் சீசன் முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தோனி விளையாடுகிறார். அந்த அணி விளையாடாத இரண்டு சீசன்கள் இதில் சேராது. இந்த நிலையில் தோனி தனது 19-வது மற்றும் சிஎஸ்கே அணியின் 17-வது சீசனிலும் விளையாடுவது உறுதியாகி உள்ளது. கடந்த சீசனில் தோனி ‘Uncapped’ வீரராக விளையாடி இருந்தார். கடந்த சீசனில் சிஎஸ்கே முதல் சுற்றோடு வெளியேறியது. புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தை சிஎஸ்கே பெற்றது.

அடுத்த சீசனுக்காக தங்கள் அணியில் தக்கவைக்கப்பட்ட வீரர்களின் விவரத்தை ஐபிஎல் அணிகள் விரைவில் அறிவிக்க வேண்டி உள்ளது. அதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் தக்கவைக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை தயார் செய்திருக்கும். இது தொடர்பாக இறுதி முடிவு எடுக்க சிஎஸ்கே பயிற்சியாளர் பிளெமிங், கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், சிஇஓ காசி விஸ்வநாதன் ஆகியோர் அடுத்த சில நாட்களில் ஆலோசிக்க உள்ளதாக தகவல்.

அதே நேரத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் டிரேடிங் முறையில் வீரர்களை மாற்றிக்கொள்ள உள்ளதாகவும் தகவல். அந்த வகையில் ராஜஸ்தான் அணியில் இருந்து சஞ்சு சாம்சன், சிஎஸ்கே அணிக்கு வரலாம் என பேச்சு எழுந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here