திரிணமூல் காங்கிரஸ் எம்பி கல்யாண் பானர்ஜியின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.56 லட்சம் மோசடி செய்யப்பட்டு உள்ளது.
மேற்குவங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் அரசு ஆட்சி நடத்தி வருகிறது. அந்த கட்சியின் மூத்த தலைவர் கல்யாண் பானர்ஜி. இவர் கடந்த 2001-ம் ஆண்டில் அசன்சோல் தெற்கு தொகுதி எம்எல்ஏவாக பதவி வகித்தார். கல்யாண் பானர்ஜியின் ஊதியம், படிகள் இந்த வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டன.
தற்போது ஸ்ரீராம்பூர் தொகுதி எம்பியாக கல்யாண் பானர்ஜி பதவி வகிக்கிறார். எம்பியான பிறகு கொல்கத்தாவில் உள்ள பொதுத்துறை வங்கிக் கணக்கை அவர் மிக நீண்ட காலமாக பயன்படுத்தவில்லை. அவர் தெற்கு கொல்கத்தாவில் உள்ள மற்றொரு வங்கிக் கணக்கை மட்டுமே பயன்படுத்தி வருகிறார்.
இந்த சூழலில் ஒரு மோசடி கும்பல், கல்யாண் பானர்ஜி பெயரில் போலி பான் கார்டு, ஆதார் கார்டை தயாரித்து அவரது தெற்கு கொல்கத்தா வங்கிக் கணக்கின் மொபைல் போன் எண்ணை மாற்றி உள்ளனர்.
இதன் மூலம் அந்த வங்கிக் கணக்கின் ஆன்லைன் பரிவர்த்தனை வசதிகள் மோசடி கும்பலின் வசமானது. இதைத் தொடர்ந்து தெற்கு கொல்கத்தா வங்கிக் கணக்கில் இருந்து கல்யாண் பானர்ஜியின் பழைய வங்கிக் கணக்குக்கு ரூ.56 லட்சம் பணம் பரிமாற்றம் செய்யப்பட்டது. இதன்பிறகு பழைய வங்கிக் கணக்கில் இருந்து பல்வேறு வங்கிக் கணக்குகளுக்கு பணம் மாற்றப்பட்டு உள்ளது. மேலும் பானர்ஜியின் வங்கிக் கணக்கை பயன்படுத்தி நகைக்கடைகளில் பெருந்தொகைக்கு நகைகள் வாங்கப்பட்டு உள்ளன. பல்வேறு ஏடிஎம் மையங்களில் இருந்தும் பணம் எடுக்கப்பட்டு இருக்கிறது. இதன்படி அவரது வங்கிக் கணக்கில் இருந்த ரூ.56 லட்சமும் மோசடி செய்யப்பட்டது.
இதுகுறித்து அரசு பொதுத்துறை வங்கியின் சார்பில் கொல்கத்தா இணைய குற்றப்பிரிவு போலீஸில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. போலீஸார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கல்யாண் பானர்ஜி எம்பி கூறும்போது, “எனக்கு தெரியாமல் போலி ஆவணங்களை வங்கியில் அளித்து மொபைல் போன் எண்ணை மாற்றி ரூ.56 லட்சம் பணத்தை மோசடி கும்பல் அபகரித்து இருக்கிறது. வங்கியில் இருக்கும் பணத்துக்குகூட பாதுகாப்பு இல்லை’’ என்று தெரிவித்தார்.














