‘சொந்த கட்சியினரால் அல்லது மக்களால் திமுக அழியும்’ என பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார். வந்தே மாதரம் பாடலின் 150-வது ஆண்டு கொண்டாட்டம் நாடு முழுவதும் நேற்று நடந்தது. தமிழக பாஜக சார்பில் சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் அருகில் நடைபெற்ற விழாவுக்கு பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமை வகித்தார்.
மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன், செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் உள்பட பாஜக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில், பிரதமர் மோடியின் ‘சுயசார்பு இந்தியா’வை வலியுறுத்தும் விதமாக சுதேசி உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனர். பின்னர், அனைவரும் வந்தே மாதரம் பாடலைப் பாடினர். தொடர்ந்து, பொதுமக்களுக்கு தமிழிசை சவுந்தரராஜன் இனிப்பு வழங்கினார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: சுதேசி உறுதிமொழியை எடுத்ததன் மூலம், அந்நிய பொருட்களை தவிர்த்து, சுதேசி பொருட்களைப் பயன்படுத்த போகிறோம்.
மேலும், சுதேசி செயலியை பயன்படுத்த போகிறோம். அதாவது, அனைவரும் பயன்படுத்தும், வாட்ஸ்அப் இப்போது ‘அரட்டை’ யாக மாறிக் கொண்டிருக்கிறது. ‘விதேசி’களை விடுத்து ‘சுதேசி’ களை ஆதரிக்கும் இயக்கங்களாக அனைத்து இயக்கங்களும் மாற வேண்டும். அதுதான் பிரதமரின் நோக்கம். நேரு, மன்மோகன் சிங், நரசிம்மராவ் காலத்திலும் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் நடத்தப்பட்டுள்ளது. ஆனால், மோடி காலத்தில் நடத்தினால் மட்டும், போராட்டம் நடத்த போகிறோம் என இண்டியா கூட்டணியினர் தெரிவித்துள்ளனர்.
2 ஆண்டுகளாக கஷ்டப்பட்டு சேர்த்த பொய் வாக்காளர்கள் அனைவரும் போய் விடுவார்கள் என்ற கவலை திமுகவுக்கு ஏற்பட்டு விட்டதா?ஜனநாயகத்தை காக்க எதை வேண்டுமானாலும் செய்ய வேண்டும் என சொல்லும் ஸ்டாலின், முதலில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்தை ஒப்புக்கொள்ள வேண்டும். கோவை முழுவதும் ஓலக்குரல் ஒலித்து கொண்டிருக்கிறது. திமுகவை சார்ந்தவர்களால்தான் திமுக அழியப்போகிறது. இல்லையென்றால், மக்களால் திமுக அழியும். இவ்வாறு அவர் கூறினார்.














