துல்கர் சல்மான் நடித்துள்ள ‘காந்தா’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
1950-களின் மெட்ராஸ் மாகாணத்தை அடிப்படையாக கொண்டு பீரியட் டிராமாவாக துல்கர் சல்மான் நடித்து வரும் ‘காந்தா’ படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்தை செல்வமணி செல்வராஜ் இயக்குகிறார். இந்தப் படத்தில் துல்கர் சல்மான் உடன் பாக்யஸ்ரீ, சமுத்திரக்கனி, ராணா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ராணாவின் ஸ்பிரிட் மீடியா மற்றும் துல்கரின் வேஃபரர் நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றன.இப்படம் வரும் நவம்பர் 14 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.
ட்ரெய்லர் எப்படி? – துல்கர் சல்மானின் கதைத் தேர்வுகள் எப்போதுமே வித்தியாசமானவை. அந்த வகையில் மீண்டும் ஒரு வித்தியாசமான கதைக்களத்துடன் களமிறங்கியுள்ளார். ட்ரெய்லரை வைத்து பார்க்கும்போது இது எம்.கே.தியாகராஜ பாகவதரின் கதையாக இருக்கலாம் என்று தோன்றுகிறது. எனினும் படக்குழு அதுகுறித்து அதிகாரபூர்வமாக எதுவும் அறிவிக்கவில்லை. மிகப்பெரிய சூப்பர்ஸ்டாராக உருவாகும் ஒருவருக்கும், அவரை உருவாக்கியவருக்கும் ஏற்படும் ஈகோ மோதலே படத்தின் மையக்கருவாக இருக்கலாம். வளர்ச்சி, புகழின் உச்சம், வீழ்ச்சி, வறுமை, காதல் என பல விஷயங்கள் ட்ரெய்லரில் மேலோட்டமாக காட்டப்படுகின்றன. பயோபிக் படங்களுக்கு எப்போதும் ஒரு எதிர்பார்ப்பு உண்டு. இப்படம் அதை பூர்த்தி செய்யுமா என்பதை பொறுத்திருந்த பார்ப்போம்.














