மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 2-வது டி20 கிரிக்கெட் போட்டியில் 3 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது நியூஸிலாந்து அணி.
ஆக்லாந்தில் உள்ள ஈடன் பார்க் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த நியூஸிலாந்து அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 207 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக மார்க் சாப்மேன் 28 பந்துகளில், 7 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 78 ரன்கள் விளாசினார்.
ரோமாரியோ ஷெப்பர்டு வீசிய 13-வது ஓவரில் 3 சிக்ஸர்களுடன் 24 ரன்களையும், ஜெய்டன் சீல்ஸ் வீசிய 15-வது ஓவரில் 4 பவுண்டரிகள், ஒரு சிக்ஸரையும் விளாசி மிரளச் செய்தார் மார்க் சாப்மேன். ஒரு கட்டத்தில் நியூஸிலாந்து அணி 12 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 83 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. ஆனால் மார்க் சாப்மேனின் அதிரடியால் அடுத்த 4 ஓவர்களில் மட்டும் 80 ரன்கள் குவிக்கப்பட்டது. மேற்கு இந்தியத் தீவுகள் அணி சார்பில் ராஸ்டன் சேஸ் 2 விக்கெட்கள் வீழ்த்தினார்.
208 ரன்கள் இலக்குடன் பேட் செய்த மேற்கு இந்தியத் தீவுகள் அணி ஒரு கட்டத்தில் 13 ஓவர்களில் 94 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்து நெருக்கடியில் இருந்தது. அப்போது ரோவ்மன் பவல், ரோமாரியோ ஷெப்பர்டு ஜோடி அதிரடியாக விளையாடி ஆட்டத்தை மேற்கு இந்தியத் தீவுகள் அணி பக்கம் திருப்பியது. ஷெப்பர்டு 16 பந்துகளில், 4 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரியுடன் 34 ரன்கள் எடுத்த நிலையில் சாண்ட்னர் பந்தில் ஆட்டமிழந்தார்.
19 ஓவர்களில் அந்த அணி 7 விக்கெட்கள் இழப்புக்கு 192 ரன்கள் எடுத்திருந்தது. கைசல் ஜேமிசன் வீசிய கடைசி ஓவரில் வெற்றிக்கு 16 ரன்கள் தேவையாக இருந்த நிலையில் ரோவ்மன் பவல், மேத்யூ போர்டு களத்தில் இருந்தனர். முதல் பந்தில் மேத்யூ போர்டு பவுண்டரி அடித்தார். அடுத்த பந்தில் ரன் ஏதும் சேர்க்கப்படாத நிலையில் நோபாலாக வீசப்பட்ட 3-வது பந்தில் பவுண்டரி அடிக்கப்பட்டது. இதற்கு மாற்றாக வீசப்பட்ட பந்தில் மேத்யூ போர்டு ஒரு ரன் எடுத்தார். 4-வது பந்தை ரோவ்மன் பவல் விளாசிய போது ஷாட் தேர்டு மேன் திசையில் கேட்ச் ஆனது.
16 பந்துகளை எதிர்கொண்ட ரோவ்மன் பவல் 6 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரியுடன் 45 ரன்கள் விளாசினார். கடைசி 2 பந்துகளில் 6 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் மேற்கு இந்தியத் தீவுகள் அணியால் 2 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. முடிவில் 20 ஓவர்களில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி 8 விக்கெட்கள் இழப்புக்கு 204 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது.
மேத்யூ போர்டு 29, அகீல் ஹோசைன் ஒரு ரன்னுடன் களத்தில் இருந்தனர். நியூஸிலாந்து அணி சார்பில் இஷ் சோதி, மிட்செல் சாண்ட்னர் ஆகியோர் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர்.
3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூஸிலாந்து அணி 3 ஆட்டங்கள் கொண்ட டி 20 தொடரை 1-1 என சமநிலையை அடையச் செய்துள்ளது. கடைசி ஆட்டம் வரும் 9-ம் தேதி நெல்சன் நகரில் நடைபெறுகிறது.














