பிஹார் துணை முதல்வரும் பாஜக மூத்த தலைவருமான விஜய் குமார் சின்ஹா, லக்கிசாராய் தொகுதியில் போட்டியிடுகிறார்.
அங்குள்ள வாக்குச் சாவடிக்கு அவர் நேற்று சென்றார். அப்போது ராஷ்டிரிய ஜனதா தள (ஆர்ஜேடி) தொண்டர்கள் அவரது காரை சூழ்ந்து தாக்க முயன்றனர். கற்கள் மற்றும் காலணிகளை கார் மீது வீசி எறிந்தனர்.
அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார், துணை முதல்வர் விஜய் குமார் சின்ஹாவை பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து விஜய் குமார் சின்ஹா கூறும்போது, “லக்கிசாராய் தொகுதியில் பாஜகவின் வெற்றி உறுதி செய்யப்பட்டு விட்டது. இதனால் எனது காரை வழிமறித்து ஆர்ஜேடி தொண்டர்கள் தாக்குதல் நடத்தினர். இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளேன்.
ஆர்ஜேடியின் காட்டாட்சி எவ்வாறு இருக்கும் என்பதற்கு என் மீது நடத்தப்பட்ட தாக்குதலே சிறந்த உதாரணம். பாஜக மீண்டும் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு ரவுடிகள் மீது புல்டோசர் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
இதுகுறித்து ஆர்ஜேடி மூத்த தலைவர் அஜய் சிங் கூறும்போது, “சில வாக்குச்சாவடிகளை கைப்பற்ற துணை முதல்வர் விஜய் குமார் சின்ஹா முயற்சி செய்தார். இதை தடுக்க முற்பட்டபோது மோதல் ஏற்பட்டது” என்றார்.














