தமிழக அரசியல் களம், நெல் கொள்முதல் பிரச்சினை, சட்டம் – ஒழுங்கு நிலவரம், தேர்தல் கூட்டணிகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணனுடன் ‘இந்து தமிழ் திசை’க்காக உரையாடியதிலிருந்து…
திராவிடக் கட்சிகளின் ஆதிக்கத்தைத் தாண்டி தங்களை வளர்த்துக் கொள்ள இடதுசாரிகள் என்ன செயல்திட்டம் வைத்திருக்கிறீர்கள்?
தேசிய முக்கியத்தும் வாய்ந்த பிரச்சினைகளில் மற்ற கட்சிகளுடன் ஒத்துழைப்பதும் எங்களின் நிலைப்பாடு. மற்றபடி மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்காக தொடர்ந்து போராடுவதன் மூலம் எங்கள் செல்வாக்கை வலுப்படுத்தி வருகிறோம். தீவிர வறுமை அற்ற மாநிலமாக சாதனை படைத்திருக்கும் கேரள மாநிலம் அதற்கு சாட்சி.
நெல் கொள்முதல் விவகாரத்தில் தமிழக அரசின் செயல்பாடுகளை எப்படிப் பார்க்கிறீர்கள்?
இந்த ஆண்டு குறுவை சாகுபடி இரட்டிப்பு பரப்பளவில் நடந்து, உற்பத்தியும் இருமடங்கு அதிகரித்துள்ளது. அதிகமான நெல் உற்பத்தி என்பதால் அதற்கான திட்டமிடலை கூடுதலாக அரசு செய்திருக்க வேண்டும். திட்டமிடல் குறைபாட்டால் பல இடங்களில் நெல் மழையில் நனைந்து முளைத்துவிட்டது. இதனால் விவசாயிகள் பல சிரமங்களை சந்தித்திருப்பது உண்மை. இதுபோன்ற தாமதங்களை தவிர்க்க ஈரப்பதத்தின் அளவைத் தீர்மானிக்கும் உரிமையை மாநில அரசிடமே மத்திய அரசு வழங்க வேண்டும்.
நெல் கொள்முதல் நிலையங்களில் மூட்டைக்கு இவ்வளவு கமிஷன் கேட்பதாக வரும் குற்றச்சாட்டுகள் இன்னும் குறையவில்லையே?
ஒரு மூட்டைக்கு ரூ.50 வரை கமிஷன் பெறப்படுவது என்பது எதார்த்தமான உண்மைதான். இதுநீண்டகாலமாக நீடிக்கும் ஒரு பிரச்சினை. லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக்களை அமைத்து, இதுபோன்ற முறைகேடுகள் நடப்பதை தடுக்க வேண்டும்.
கரூர் சம்பவத்தில் தவெக மீது முதல்வர் வன்மத்தை கக்கியிருப்பதாக விஜய் சொல்லி இருக்கிறாரே..?
இதை ஒரு இட்டுக்கட்டிய செய்தியாகவே பார்க்கிறேன். விஜய் அங்கு வர ஏன் பல மணி நேரம் தாமதமானது என்பதற்கு தவெக தரப்பில் இருந்து எந்த விளக்கமும் இல்லை. காலதாமதம்தான் அங்கு ஏற்பட்ட நெருக்கடிக்கு முக்கியக் காரணம்.
விஜய் சொல்வது போல் 2026 தேர்தலில் திமுக-வுக்கும் தவெக-வுக்கும் தான் போட்டியா?
ஒவ்வொரு கட்சியும் அப்படித்தான் சொல்கிறார்கள். அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி கூட எங்களுக்கும் திமுக-வுக்கும் தான் போட்டி என்கிறார். விஜய் தரப்பும் அதையே சொல்கிறது. இதிலிருந்து தெரிவது, தமிழகத்தில் திமுக அணிதான் பிரதானமான அணி என்பதை அனைவரும் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள் என்பது தான்.
சமீப காலமாக அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமைகள் மற்றும் சட்டம் – ஒழுங்குப் பிரச்சினைகளை எப்படிப் பார்க்கிறீர்கள்?
ஒரு சம்பவம் நடந்தவுடன் காவல்துறை எவ்வளவு விரைவாக நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளைக் கைது செய்கிறது என்பதைத் தான் பார்க்க வேண்டும். அந்தவகையில், அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது.
தமிழகத்தில் தொழிலாளர் பிரச்சினைகளை காதுகொடுத்து கேட்கிறதா திமுக அரசு?
தொழிலாளர்கள் பிரச்சினையில் திமுக அரசின் அணுகுமுறையில் போதாமை இருக்கிறது என்பது உண்மை. சங்கம் வைப்பதற்குக்கூட போராட வேண்டியிருக்கிறது. தனியார் பல்கலைக்கழக சட்டத் திருத்தம் போன்றவற்றின் மூலம் நவீன தாராளமய கொள்கை அடிப்படையில் செயல்படும் திமுக அரசு, உழைப்பாளர் உரிமைக்கு முன்னுரிமை அளிக்கத் தயங்குகிறது. தொழிலாளர் பிரச்சினையில் அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
எஸ்ஐஆர் பணிகளை இண்டியா கூட்டணிக் கட்சிகள் சர்ச்சைக்குள்ளாக்குவது ஏன்?
எஸ்ஐஆர் என்பது வாக்காளர்களின் குடியுரிமையை சோதிக்கும் ஒரு மறைமுக முயற்சி. பல ஆவணங்களைக் கேட்பதன் மூலம், தேசிய குடிமக்கள் பதிவேட்டை கொல்லைப்புறமாகச் செயல்படுத்தப் பார்க்கிறார்கள். பல லட்சம் போலி வாக்காளர்கள் சேர்க்கப்படுவதும், உண்மையான வாக்காளர்கள் நீக்கப்படுவதும் தேர்தல் ஆணையத்தின் உடன்பாடு இல்லாமல் நடக்க வாய்ப்பில்லை. தேர்தல் ஆணையம், பாஜக-வின் கட்டுப்பாட்டில் இருப்பதற்கு இதுவே சாட்சி.
2026 தேர்தலில் மார்க்சிஸ்ட் கட்சிக்கு திமுக கூட்டணியில் எத்தனை தொகுதிகள் தந்தால் திருப்தி அடைவீர்கள்?
ஆளும் கட்சியாக இருப்பவர்கள் அதிக இடங்களை எடுக்க நினைப்பதும், கூட்டணிக் கட்சிகள் தங்களுக்குக் கூடுதல் இடங்களைக் கேட்டுப் போராடுவதும் இயற்கை. அன்றும் இந்த இழுபறி இருந்தது; இன்றும் இருக்கிறது. கடந்த முறையை விடக் கூடுதல் இடங்கள் வேண்டும் என்பதை நாங்கள் உறுதியாக வலியுறுத்துவோம். பாஜக-வை வீழ்த்த வேண்டும் என்ற லட்சியத்தில் திமுக தலைமை, கூட்டணிக் கட்சிகளின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து உரிய முடிவை எடுக்கும் என நம்புகிறோம்.














