ஐசிசி மகளிர் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம்பிடித்துள்ள மேற்கு வங்கத்தைச் சேர்ந்த வீராங்கனையான ரிச்சா கோஷுக்கு தங்க முலாம் பூசப்பட்ட பேட், பந்தை பரிசாக வழங்க அம்மாநில கிரிக்கெட் சங்கம் (சிஏபி) முடிவு செய்துள்ளது.
அண்மையில் முடிவடைந்த மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வென்று கோப்பையை முதன்முறையாகக் கைப்பற்றியது. இந்திய அணியில் இடம்பிடித்த ரிச்சா கோஷ் ஒட்டுமொத்தமாக தொடரில் 235 ரன்கள் விளாசினார்.
மேலும், இந்த உலகக் கோப்பை தொடரில் ரிச்சா கோஷ் 12 சிக்ஸர்களை விளாசியிருந்தார். இதன் மூலம் ஓர் உலகக் கோப்பை தொடரில் அதிக சிக்ஸர்கள் விளாசிய மேற்கு இந்தியத் தீவுகள் அணி வீராங்கனை தியாந்த்ரா தோட்டினின் சாதனையை ரிச்சா கோஷ் சமன் செய்திருந்தார்.
இதையடுத்து அவருக்கு வரும் 8-ம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் பிரமாண்டமான முறையில் பாராட்டு விழாவை மேற்கு வங்க கிரிக்கெட் சங்கம் நடத்தவுள்ளது.
அப்போது அவருக்கு தங்க முலாம் பூசப்பட்ட பேட், பந்து ஆகியவற்றை பரிசாக மேற்கு வங்க கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் வழங்கி கவுரவிக்க உள்ளனர்.














