ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான பாரம்பரியமிக்க ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் வரும் 21-ம்
தேதி பெர்த் நகரில் தொடங்குகிறது. இந்நிலையில் இந்தத் தொடரின் முதல் போட்டிக்கான 15 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இதில் முன்னணி பேட்ஸ்மேனான மார்னஷ் லபுஷேன் மீண்டும் அணிக்கு திரும்பி உள்ளார்.
மோசமான பார்ம் காரணமாக கடந்த ஜூலை மாதம் மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மார்னஸ் ஷபுஷேன் நீக்கப்பட்டிருந்தார். இதைத் தொடர்ந்து அவர், உள்ளூர் போட்டியில் சிறப்பாக விளையாடி மீண்டும் தேசிய அணியில் இடம் பிடித்துள்ளார். 31 வயதான தொடக்க வீரரான ஜேக் வெதரால்ட் அறிமுக வீரராக சேர்க்கப்பட்டுள்ளார். அதேவேளையில் மேட் ரென்ஷா, சாம் கான்ஸ்டாஸ் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
ஜேக் வெதரால்ட், ஷெப்ஃபீல்ட் ஷீல்டு தொடரில் 50.33 சராசரியுடன் 906 ரன்கள் குவித்திருந்தார். மேலும் இலங்கை ‘ஏ’ அணிக்கு எதிரான ஆட்டத்தில் சதமும் அடித்திருந்தார். பாட் கம்மின்ஸ் காயத்தில் இருந்து குணமடையாததால் ஸ்டீவ் ஸ்மித் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹேசில்வுட், ஸ்காட் போலண்ட், சீன் அபோட், பிரெண்டன் டாகெட் ஆகிய 5 வேகப்பந்து வீச்சாளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் பிரெண்டன் டாகெட் அறிமுக வீரர் ஆவார். ஆல்ரவுண்டர்களாக பியூ வெப்ஸ்டர், கேமரூன் கிரீன் சேர்க்கப்பட்டுள்ளனர். இதனால் மிட்செல் மார்ஷுக்கு அணியில் இடம் வழங்கப்படவில்லை.
அணி விவரம்: ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), உஸ்மான் கவாஜா, ஜேக் வெதரால்ட், டிராவிஸ் ஹெட், மார்னஷ் லபுஷேன், ஜோஷ் இங்லிஷ், அலெக்ஸ் கேரி, கேமரூன் கிரீன், பியூ வெப்ஸ்டர், நேதன் லயன், மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹேசில்வுட், சீன் அபோட், ஸ்காட் போலண்ட், பிரெண்டன் டாகெட்.














