ராணுவத்துக்கு மதம், ஜாதி ஆகியவை கிடையாது என ராகுல் கருத்துக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பதில் அளித்துள்ளார்.
பிஹார் மாநிலம் அவுரங்காபாத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் மக்களவை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறுகையில், ‘‘ நாட்டில் உயர் வகுப்பைச் சேர்ந்தவர்கள் 10 சதவீதம் பேர் உள்ளனர்.
இவர்கள் கட்டுப்பாட்டில்தான் கார்பரேட் நிறுவனங்கள், அரசு நிர்வாகம், நீதித்துறை, ராணுவமும் கூட இந்த 10 சதவீதத்தினர் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. மீதம் உள்ள 90 சதவீதம் பேர் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், எஸ்.சி, எஸ்டி பிரிவினர் மற்றும் இதர சிறுபான்மையினர்.
அதனால்தான் நாங்கள் சமூக நீதி, சம வாய்ப்புக்கு தேசியளவில் ஜாதி ரீதியான மக்கள் தொகை கணக்கெடுப்பு தேவை என கோரிக்கை விடுக்கிறோம்’’ என்றார்.
ராகுலின் இந்த கருத்துக்கு பதில் அளித்துள்ள பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியதாவது: ராணுவத்திலும் இட ஒதுக்கீடு முறையை கொண்டுவந்து ஒழுங்கற்ற தன்மையை ஏற்படுத்த ராகுல் காந்தி முயற்சிக்கிறார். அவர் ராணுவத்தை அரசியலுக்குள் இழுக்க முயற்சிக்கிறார்.
இட ஒதுக்கீடு இருக்க வேண்டும். பாஜக.,வும் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவானதுதான். ஏழைகளுக்கு நாங்கள் இட ஒதுக்கீடு வழங்கியுள்ளோம். ஆனால் நமது ராணுவ வீரர்களுக்கு ஒரே ஒரு மதம்தான்.
ராணுவ நடத்தை விதிமுறைதான் அவர்களின் மதம். நாடு நெருக்கடியை சந்திக்கும்போதெல்லாம் நமது வீரர்கள் தங்களின் வீரம் மூலம் நாட்டை தலை நிமிரச் செய்துள்ளனர். ஜாதி, மத ரீதியிலான அரசியல் நாட்டுக்கு தீங்கை ஏற்படுத்தியுள்ளது. அனைத்து தரப்பினரும் முன்னேற வேண்டும் என்பதுதான் நமது எண்ணம். பாகுபாட்டை ஏற்படுத்த நாங்கள் விரும்பவில்லை. இவ்வாறு ராஜ்நாத் சிங் கூறினார்.














