கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டத்தில் உள்ள மூடனஹள்ளியை சேர்ந்தவர் மஞ்சே கவுடா (55).
இவருக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலம் கர்நாடக வனத்துறை இடத்துக்கு அருகில் இருந்தது. இதனால் வனத்துறை அந்த நிலத்தை 3 ஆண்டுகளுக்கு முன்பு கையகப்படுத்தியது. தனது நிலத்துக்கு உரிய இழப்பீடை உடனடியாக வழங்குமாறு மண்டியா மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மஞ்சே கவுடா மனு அளித்தார். ஆனால் அரசு இழப்பீடு வழங்காமல் காலம் தாழ்த்தியுள்ளது.
இந்நிலையில் மஞ்சே கவுடா நேற்று முன் தினம் மண்டியா மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு தன் உடல் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதனை கண்ட காவல் துறையினர் தீயை அணைத்து, உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இருப்பினும் மஞ்சே கவுடா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுகுறித்து அறிக்கை அளிக்குமாறு அதிகாரிகளுக்கு கர்நாடக வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் காண்ட்ரே உத்தர விட்டுள்ளார்.














