தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் ஜூப்ளி ஹில்ஸ் சட்டப்பேரவை தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஆளும் காங்கிரஸ், பாஜக, பிஆர்எஸ் கட்சிகளுக்கு இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது.
இந்நிலையில் ஜூப்ளி ஹில்ஸ் சிறுபான்மையினர் சங்கத்தினர் நேற்று முதல்வர் ரேவந்த் ரெட்டியை சந்தித்து காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தெரிவித்தனர். அப்போது ரேவந்த் ரெட்டி பேசியதாவது:
ராகுல்காந்தி பாத யாத்திரை மேற்கொண்டபோது காங்கிரஸ் மட்டுமே சிறுபான்மையினர் நலனில் அக்கறை செலுத்தும் கட்சி என பெருமையுடன் கூறினார். அதை எங்கள் அரசு செயல்படுத்தி வருகிறது.
ஆனால் முன்னாள் முதல்வரான கே.சந்திரசேகர ராவ், தனது பிஆர்எஸ் கட்சியை பாஜகவிடம் அடமானம் வைத்துவிட்டு, சிறுபான்மையினரை ஏமாற்றி வருகிறார். காலேஸ்வரம் அணை ஊழல் வழக்கை சிபிஐ-யிடம் ஒப்படைத்து 3 மாதங்கள் ஆகிறது. இவ்வழக்கில் இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லை.
ஃபார்முலா இ-கார் ரேஸ் வழக்கில், கே.டி.ராமாராவை கைது செய்ய ஆளுநர் இதுவரை அனுமதி வழங்கவில்லை. பாஜக- பிஆர்எஸ் இடையே ஒப்பந்தம் இல்லாவிடில் இதுபோல் நடக்க வாய்ப்பில்லை. இவ்வாறு அவர் கூறினார்.














