தேர்தல் கூட்டணியை நான் பார்த்துக் கொள்கிறேன், நீங்கள் கட்சி வளர்ச்சிப் பணிகளை கவனியுங்கள் என்று அதிமுக மாவட்டச் செயலாளர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் பொதுச்செயலாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார். இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியை கடந்த நவ.4-ம் தேதி தொடங்கியது. இதற்கு திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
அதே நேரத்தில் அதிமுக மற்றும் பாஜக ஆகிய கட்சிகள் ஆதரித்து வருகின்றன. ஏற்கெனவே வாக்காளர் பட்டியலில் அதிக அளவில் போலி வாக்காளரை திமுக அரசு சேர்த்து இருப்பதாக அதிமுக குற்றஞ்சாட்டி வருகிறது. இந்நிலையில், அதிமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம், சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில், பொதுச்செயலாளர் பழனிசாமி தலைமையில் நேற்று நடைபெற்றது.
இதில், வாக்குச்சாவடி கிளை அளவில் நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் அனைவரையும் ஆன்லைனில் ஒருங்கிணைப்பது உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருவது குறித்த விவரங்களை கேட்டறிந்தார். பின்னர் கூட்டத்தில் பேசும்போது, எஸ்ஐஆர் பணி மிகவும் முக்கியமான பணி. வாக்காளர் பட்டியலில் உள்ள குளறுபடிகளை சரி செய்வதற்கு இது சரியான தருணம். அதனால் இதில் மாவட்ட செயலாளர்கள் அனைவரும் தனிக்கவனம் செலுத்தி, சரியான வாக்காளர் பட்டியல் தயார் செய்வதற்கு தேவையான உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
அதிமுக வாக்களிக்கக்கூடியவர்களின் பெயர்களை, வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க திட்டமிட்டால் அதை தீவிரமாக கண்காணித்து தடுக்க வேண்டும். ஒன்றிய அளவில் வழக்கறிஞர் அணியினரை நியமிக்க வேண்டும். ஒன்றிய அளவில் எஸ்ஐஆர் பணியில் ஆளுங்கட்சியினரின் தலையீடுகள், முறைகேடுகள் ஏதேனும் இருந்தால், உடனடியாக மாவட்ட தேர்தல் அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்க வேண்டும். எஸ்ஐஆர் பணியை ஆளுங்கட்சியினரே கையிலெடுத்துக்கொள்ளும் செயல்கள் எங்கேனும் நடைபெற்றால் உடனடியாக தடுத்துநிறுத்த வேண்டும்.
இந்த பணியில் அதிமுக சார்பில் நியமிக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி முகவர்கள் மற்றும் நிர்வாகிகளை, எஸ்ஐஆர் பணியில் முழுமையாக ஈடுபடுத்த வேண்டும். இப்பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள அரசு அலுவலர்களின் பணிகளையும் தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.
தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் கூட்டணியை நான் பார்த்துக்கொள்கிறேன். நீங்கள் கட்சி வளர்ச்சி பணிகளை தீவிரமாக மேற்கொள்ளுங்கள். உள்ளாட்சிகள் அளவிலான மக்கள் பிரச்சினைகள் தொடர்பாக அதிக அளவில் ஆர்ப்பாட்டங்களை நடத்துங்கள்.
திமுக அரசின் அவலங்களை மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும். குறிப்பாக பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதை எடுத்துச்சொல்லுங்கள். இவ்வாறு அவர் பேசினார். இக்கூட்டத்தில் பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், துணைப்பொதுச் செயலாளர்கள் நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி, தலைமை நிலைய செயலாளர் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் கலந்துகொண்டனர்.














