வாக்கு அரசியலுக்காக தமிழகத்தில் பிஹார் மக்கள் துன்புறுத்தப்படுவதாக பிரதமர் மோடி பேசுகிறார். தமிழகம் வந்து இவ்வாறு பேச அவருக்கு தைரியம் உள்ளதா? என்று முதல்வர் ஸ்டாலின் ஆவேசமாக கேள்வி எழுப்பி உள்ளார்.
தருமபுரி மக்களவை உறுப்பினர் மணி இல்ல திருமண விழா தருமபுரியில் நேற்று நடந்தது. இந்நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று மங்கல நாணை எடுத்துக் கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்தார். பின்னர் விழாவில் அவர் பேசியதாவது: அனைத்துக் கட்சிக் கூட்டம் ஒன்றை நடத்தி முக்கிய தீர்மானங்களை நிறைவேற்றிய கையோடு இந்த திருமணத்திற்கு வந்திருக்கிறேன். சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி என்ற பெயரில் தேர்தல் ஆணையம் தீய மற்றும் சதிச் செயலில் ஈடுபட்டு வருகிறது. அதை தடுப்பதற்காகவே அனைத்துக் கட்சி கூட்டம் நடத்திதீர்மானம் நிறைவேற்றி இருக்கிறோம். சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிக்கு உரிய அவகாசம் தேவை, பதற்றத்துடன் இந்த பணியை செய்ய வேண்டியது இல்லை என்றும் வலியுறுத்தி உள்ளோம்.
உண்மையான வாக்காளர்களை நீக்கும் தந்திர செயலாகவே இதை பார்க்கிறோம். பிஹாரிலும் இதுவே நடந்தது. ராகுல் காந்தி இதைக் கடுமையாக எதிர்த்துள்ளார். இது தொடர்பாக விவாதிப்பதற்காகக் கூட்டப்பட்ட அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அதிமுக உள்ளிட்ட சில கட்சிகள் வரவில்லை. ஆனால், சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி தொடர்பாக எதிர்க்கட்சியான அதிமுகவுக்கு சந்தேகமும் இருக்கிறது. இது அவர்களின் இரட்டை வேடத்தைக் காட்டுகிறது.
பாஜக இது போன்ற எந்த சதிச் செயலில் ஈடுபட்டாலும் தமிழகத்தில் அவர்களால் காலூன்ற முடியாது. தன்னை எல்லோருக்குமான பிரதமர் என்று பிஹாரில் கூறிக் கொள்ளும் பிரதமர் மோடி, வாக்கு அரசியலுக்காக அங்கு நாடகம் நடத்தி வருகிறார். தமிழகத்தில் பிஹார் மக்கள் துன்புறுத்தப்படுவதாக பேசுகிறார். தமிழகத்தில் வந்து இவ்வாறு பேசுவதற்கு அவருக்கு தைரியம் உள்ளதா?
பாஜகவினர் என்ன சதி செய்தாலும், அவதூறு பரப்பினாலும், போலியான தகவல்களைப் பரப்பினாலும் 2026-ல் தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி தான் அமையும். தமிழக மக்கள் மீதான நம்பிக்கையில் இதை கூறுகிறேன். துணையாக இருப்பீர்கள் என நம்புகிறேன். 2021-ல் அதிமுகவிடமிருந்து தமிழகத்தை மீட்டோம். 2026-ல் பாஜக மற்றும் அதிமுக கூட்டணியிடமிருந்து தமிழகத்தை மீட்போம். இவ்வாறு அவர் பேசினார்.














