தென் ஆப்பிரிக்க ஏ அணியுடனான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய ஏ அணி 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பெங்களூருவில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் தென் ஆப்பிரிக்க ஏ அணி 309 ரன்களும், இந்திய ஏ அணி 234 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தன. இதைத் தொடர்ந்து 2-வது இன்னிங்ஸை விளையாடிய தென் ஆப்பிரிக்க ஏ அணி 199 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதைத் தொடர்ந்து இந்திய ஏ அணி 275 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2-வது இன்னிங்ஸை விளையாடத் தொடங்கியது.
3-ம் நாள் ஆட்ட நேர இறுதியில் இந்திய ஏ அணி 4 விக்கெட் இழப்புக்கு 119 ரன்கள் எடுத்திருந்தது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற 4-ம் நாள் ஆட்டத்தை ஆயுஷ் பதோனி, கேப்டன் ரிஷப் பந்த் விளையாடினர். பதோனி 34 ரன்களில் வீழ்ந்தார். மறுமுனையில் கேப்டன் ரிஷப் பந்த் 113 பந்துகளில் 90 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.
கடைசி ஓவர்களில் தனுஷ் கோட்டியான் 23, மானவ் சுதர் 20, அன்ஷுல் காம்போஜ் 37 ரன்கள் சேர்த்து இந்திய அணிக்கு வெற்றி தேடித் தந்தனர். 73.1 ஓவர்களில் இந்திய ஏ அணி 7 விக்கெட் இழப்புக்கு 277 ரன்கள் சேர்த்து 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.








