ராமதாஸ் தலைமையிலான பாட்டாளி மக்கள் கட்சியின் செங்கல்பட்டு மாவட்ட செயற்குழு கூட்டம் சிங்கப்பெருமாள் கோவிலில் நடைபெற்றது. இதில் கட்சியின் மாநில இளைஞரணி தலைவர் ஜி.கே.எம். தமிழ் குமரன் கலந்து கொண்டு பேசியதாவது: பாமகவை பற்றி இழிவுபடுத்தும் வகையில் சமூக வலைதளங்களில் சிலர் அவதூறுகளை பரப்பி வருகின்றனர். அவற்றையெல்லாம் கருத்தில் கொள்ள வேண்டாம். வருங்காலத்தில் பாட்டாளி மக்கள் கட்சி 2031-ல் தனித்து ஆட்சி அமைக்க வேண்டும். ராமதாஸின் கரத்தை பலப்படுத்தும் வகையில் நாம் இப்பொழுது ஒன்றிணைந்து வருகிறோம். சிலர் நம்மிடையே பல்வேறு பிளவுகளை ஏற்படுத்தி வருகின்றனர்.
அவற்றை எல்லாம் பொருட்படுத்தாமல் கடந்த காலங்களில் வன்னியர் சங்கமாக இருந்ததை பாட்டாளி மக்கள் கட்சியாக மாற்றி இந்திய அளவில் பாட்டாளி மக்கள் கட்சியை கொண்டு சென்றவர் மருத்துவர் ராமதாஸ் மட்டுமே. இடையில் வந்தவர்களை பற்றி கவலைப்பட வேண்டாம், வெறுப்பு அரசியல் செய்ய வேண்டாம், கட்சிப் பணிகளை சரிவர பாருங்கள். டிசம்பரில் ஆர்ப்பாட்டத்திற்கு அனைவரும் தயாராக இருக்க வேண்டும். நம்மிடம் உள்ள துரோகிகளை இனம் கண்டு தேர்தலில் தக்க பாடம் புகட்டுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.














