கடந்த ஆண்டு ஏப்ரலில் ஒடிசாவின் கந்தமால் மாவட்டத்தில் உள்ள ஒரு வீட்டுக்குள் முகமூடி அணிந்த மர்ம நபர்கள் துப்பாக்கி மற்றும் கத்தியுடன் புகுந்தனர். அங்கிருந்த மைனர் பெண்ணிடம் இருந்து தங்க நெக்லஸ், காதணிகள் மற்றும் ரூ.50,000 ரொக்கத்தை பறித்தனர். பிறகு அவரை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர்.
இது தொடர்பாக பிரிங்கியா காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இதில் டேரிங்பாடி காவல் நிலையப் பகுதியை சேர்ந்த, 24 முதல் 47 வயதுக்குட்பட்ட 5 பேரை கைது செய்தனர்.
இவர்கள் மீதான வழக்கு புல்பானி விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. நீதிபதி கைலாஷ் சந்திர ஸ்வைன் நேற்று முன்தினம் தீர்ப்பு கூறினார். இதில் குற்றவாளிகள் 5 பேருக்கும் 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும் தலா ரூ.26,000 அபராதமும் விதித்தார். அபராதம் செலுத்தத் தவறினால் கூடுதலாக 5 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்கவும் நீதிபதி உத்தரவிட்டார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மாவட்ட சட்ட சேவைகள் ஆணையம் ரூ.6 லட்சம் இழப்பீடு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.
 
            

