கேரளாவில் பேய் பிடித்திருப்பதாகக் கூறி மனைவியை தாக்கிய கணவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம், சந்தயமங்கலத்தைச் சேர்ந்தவர் சஜீர். இவர் தனது மனைவி ரெஜிலாவுக்கு பேய் பிடித்திருப்பதாக கருதி தாக்கி உள்ளார். இதுகுறித்து ரெஜினா போலீஸில் புகார் செய்தார். போலீஸார் எச்சரித்து அனுப்பினர்.
அதன் பிறகு, சஜீர் சூனியக்காரரை சந்தித்து ஆலோசனை கேட்டுள்ளார். அவரது அறிவுரைப்படி, நேற்று முன்தினம் காலையில், மனைவியை தன் முன் உட்கார வைத்து தலை முடியை விரித்து விடும்படி கூறியுள்ளார். பின்னர் அவரது முகத்தில் சாம்பலை பூசிவிட்டு, சூனியக்காரர் கொடுத்த ஒரு டாலரை கழுத்தில் கட்ட முயன்றுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் சமையலறையில் சமைத்து வைத்திருந்த சூடான மீன் குழம்பை எடுத்து வந்து ரெஜிலா முகத்தில் கொட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதனால் காயமடைந்த ரெஜிலாவை அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அழைத்துச் சென்று மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதுகுறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து சஜீரை தேடி வருகின்றனர்.
 
            

