அரசியலில் எதிரும், புதிருமாக இருந்த வைகோவும் சீமானும் நேற்று பசும்பொன்னில் சந்தித்துக் கொண்ட நிகழ்வும் சீமானை ‘செந்தமிழர் சீமான்’ என வைகோ வாழ்த்தி முழக்கமிட்டு அவரை ஆரத்தழுவிக் கொண்டதும் நாதக மற்றும் மதிமுகவினர் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
தமிழக அரசியலில் வைகோவும் சீமானும் எதிர் எதிர் துருவமாக செயல்பட்டு வந்தனர். விடுதலை புலிகள் சம்பந்தமான விவகாரத்தில் இருவரும் ஒருவர் மீது ஒருவர் மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வந்தநிலையில் நேற்று இருவரும் ஒரே நேரத்தில் பசும்பொன்னில், தேவர் நினைவிடத்திற்கு மரியாதை செலுத்த வந்தனர்.
இருவரும் ஒன்றாகவே பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர். அப்போது வைகோ, ‘‘செந்தமிழர் சீமானும், நானும் ஒரே வேளையில் பசும்பொன் வந்தது எல்லையில்லா மகிழ்ச்சி அளிக்கிறது. அவரது முயற்சிகளும் வெற்றி மேல் வெற்றி பெறட்டும். நான் மருத்துவமனையில், இருந்தபோது சீமான் என்னை வந்து பார்த்தார். அவருக்கு உடல்நிலை சரியில்லாவிட்டால் நான் கவலையுடன் பேசுவேன்” என்றார்.
பதிலுக்கு சீமான், ‘‘நானும் என் அண்ணனும் அவரது அம்மா இறந்தபோது ஒன்றாக நின்று பேட்டியளித்தோம்” என்று சிலாகித்தார். அதற்கு வைகோ, ‘‘என் தாயார் இறந்த போது கலிங்கப்பட்டிக்கு இரவோடு இரவாக சீமான் வந்துவிட்டார். சீமானின் அரசியல் பயணம் தொடரட்டும்’’ என்றார். அத்துடன், சீமானை ‘செந்தமிழர் சீமான்’ என்று வைகோ வாழ்த்தி முழக்கமிட, இருவரும் ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி கட்டி அணைத்துக் கொண்டது இரண்டு கட்சிகளின் நிர்வாகிகள் மத்தியிலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
 
            

