‘இண்டியா கூட்டணிக்கு வாருங்கள்…’ – புதுவை முதல்வர் ரங்கசாமிக்கு திமுக பகிரங்க அழைப்பு!

0
24

பாஜக தலைமை மீது அதிருப்தியில் இருக்கும் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தனது பதவியை ராஜினாமா செய்யப் போவதாக தகவல்கள் பரவி வரும் நிலையில், அவரை இண்டியா கூட்டணிக்கு வருமாறு அழைப்பு விடுத்திருக்கிறார் மாநில திமுக அமைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எம்.எச்.நாஜிம் எம்எல்ஏ.

இதுகுறித்து காரைக்காலில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘‘புதுச்சேரியில் முதல்வர், அமைச்சர்கள், எம்எல்ஏ-க்களுக்கான அதிகாரங்களும், அரசியல் கட்சிகளுக்கான மரியாதையும் குறைந்து கொண்டே வருகிறது. முதல்வர் ரங்கசாமி, இனிமேலாவது இதைப் புரிந்துகொண்டு, பாஜக கூட்டணியை விட்டு வெளியேறி, திமுக, காங்கிரஸுடன் இணைந்து பணியாற்றும் முடிவை எடுக்கவேண்டும்” என்று ரங்கசாமிக்கு பகிரங்க அழைப்பு விடுத்தது புதுச்சேரி அரசியலில் பரபரப்பு பேச்சாகி இருக்கிறது.

இது குறித்து நாஜிமிடம் கேட்டதற்கு, ‘‘புதுச்சேரியில் தற்போது நடந்துகொண்டிருக்கும் மோசமான காட்சிகளுக்கெல்லாம் முடிவுகட்ட வேண்டும் என்றால் இண்டியா கூட்டணியுடன் ரங்கசாமி கைகோப்பது தான் அவருக்கு நல்லது. இதை காங்கிரஸும் ஏற்றுக்கொள்ளும். மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியுடனும், மகாராஷ்டிராவில் நேர் எதிரியான சிவசேனாவுடனும், பிஹாரில் ராஷ்டிரிய ஜனதா தளத்துடனும் காங்கிரஸ் கூட்டணி அமைத்திருக்கும் போது இது ஒன்றும் தவறில்லை’’ என்றார்.

இது தொடர்பாக மாநில காங்கிரஸ் துணைத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.கமலக்கண்ணனிடம் கேட்டதற்கு, ”புதுச்சேரியில் ஆளும் முதல்வருக்கும் ஆட்சியாளர்களுக்கும் ஜனநாயக ரீதியான உரிமைகள் மறுக்கப்படுகின்றன. அதிகாரிகள் ராஜ்ஜியம்தான் நடக்கிறது. இப்படியான சூழலில், அனைவரும் ஒன்றிணைந்து ஜனநாயக ரீதியிலான ஒரு அரசு அமைய நீங்கள் எங்களோடு வாருங்கள் என்ற ரீதியில்தான் ரங்கசாமிக்கு நாஜிம் அழைப்பு விடுத்துள்ளதாக நான் பார்க்கிறேன்.

ஆளும் கட்சியான என்.ஆர்.காங்கிரஸுடன் மக்கள் செல்வாக்குடன் உள்ள காங்கிரஸ், திமுக ஆகிய கட்சிகள் ஒன்று சேர்ந்தால் புதுச்சேரியில் வேறு யாரும் எந்த ரூபத்திலும் ஆட்சியை கைப்பற்ற முடியாது என்பதால் இதை ஒரு ஆரோக்கியமான அழைப்பாகவே நான் பார்க்கிறேன்’’ என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here