இங்கிலாந்து அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூஸிலாந்து அணி தொடரை 2-0 என கைப்பற்றியது.
ஹாமில்டன் நகரில் நேற்று நடைபெற்ற 2-வது ஒருநாள் போட்டியில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 36 ஓவர்களில் 175 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக ஜேமி ஓவர்டன் 28 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 42 ரன்களும், கேப்டன் ஹாரி புரூக் 34 ரன்களும் சேர்த்தனர். ஜேமி ஸ்மித் 13, பென் டக்கெட் 1, ஜோ ரூட் 25, ஜேக்கப் பெத்தேல் 18, ஜாஸ் பட்லர் 9, சேம் கரண் 17, பிரைன் கார்ஸ் 3, ஆதில் ரஷித் 9 ரன்களில் நடையை கட்டினர்.
நியூஸிலாந்து அணி தரப்பில் பிளேயர் டிக்னர் 4, நேதன் ஸ்மித் 2 விக்கெட்களை வீழ்த்தினர். 176 ரன்கள் இலக்குடன் பேட் செய்த நியூஸிலாந்து அணி 33.1 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 177 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
அதிகபட்சமாக ரச்சின் ரவீந்திரா 58 பந்துகளில், ஒரு சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 54 ரன்களும், டேரில் மிட்செல் 59 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 56 ரன்களும், கேப்டன் மிட்செல் சாண்ட்னர் 34 ரன்களும் சேர்த்தனர்.
வில் யங் 0, கேன் வில்லியம்சன் 21, டாம் லேதம் 2, மைக்கேல் பிரேஸ்வெல் 5 ரன்களில் ஆட்டமிழந்தனர். இங்கிலாந்து அணி சார்பில் ஜோப்ரா ஆர்ச்சர் 3 விக்கெட்களை வீழ்த்தினார். 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூஸிலாந்து அணி 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரை 2-0 என கைப்பற்றியது. முதல் போட்டியில் நியூஸிலாந்து அணி 4 விக்கெட்கள் வித்தியாசத்த்தில் வெற்றி பெற்றிருந்தது. கடைசி மற்றும் 3-வது போட்டி நவம்பர் 1-ம் தேதி வெலிங்டனில் நடைபெறுகிறது.














