ஹாலிவுட் மற்றும் பிரிட்டீஷ் திரைப்படங்களின் பாதிப்பில், தனது 17 வயதிலேயே சினிமாவுக்கு வந்தவர், வட இந்தியரான கே.அமர்நாத். ஆரம்ப காலகட்டங்களில் திரைப்படங்கள் அதிகமாக உருவான கொல்கத்தாவுக்குச் சென்ற அவர், அங்கு நடிப்பதற்கு வாய்ப்புகளைத் தேடினார்.
பின்னர் மும்பைக்குத் திரும்பினார். அவர் எதிர்பார்த்தபடி வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ஜூனியர் ஆர்ட்டிஸ்டாக சில படங்களில் நடித்தார். பிறகுதான், சினிமாவில் நடிப்பை விட இயக்குநர் ‘சீட்’ முக்கியம் என்பது அவருக்குப் புரிந்தது. இதனால் நடிப்பில் இருந்து அவர் கனவு இயக்குநர் ‘சீட்’ பக்கம் தாவியது. நான்கு வருடப் போராட்டங்களுக்குப் பிறகு ‘மத்வாலி ஜோகன்’ என்ற இந்திப்படம் மூலம் இயக்குநரானார் அவர். அப்போது அவருக்கு வயது 21.
இதற்கு பிறகு அவர் தமிழ், இந்தியில் இயக்கிய ‘டேஞ்சர் சிக்னல்’ திரைப்படம் அவருக்குப் புகழைப் பெற்றுத் தந்தது. இது மிஸ்டரி த்ரில்லர் திரைப்படம். இதையடுத்து, பக்கா ரவுடி, வீரரமணி, பாக்யலீலா ஆகிய தமிழ்ப் படங்களை இயக்கினார் கே.அமர்நாத். அவர் இயக்கிய மற்றொரு திரைப்படம், ‘மின்னல் கொடி’. தமிழின் முதல் முழுநீள சண்டைப் படம் இது.
ராபின்ஹூட் ஸ்டைல் கதைதான் படம். மோகினி என்ற இளம் பெண், தன்னுடைய தந்தையை இழக்கிறார். அவளுடைய சொத்தை தந்திரமாகக் கைப்பற்றி, அவளையும் அவளுடைய வேலைக்காரனையும் விரட்டி விடுகிறார் உறவினர். அவர்கள் தஙகுவதற்கு கூட இடமில்லாமல் அலைகிறார்கள். ஒரு கட்டத்தில் அவர்கள் அலைந்து கொண்டிருக்கும்போது, ‘மின்னல்கொடி’ என்ற கொள்ளைக்காரனை, போலீஸிடம் இருந்து காப்பாற்றுகிறார்கள். அவர் இறக்கும் முன், மோகினியை தனது கொள்ளைக் கூட்டத்துக்குத் தலைவியாக நியமிக்கிறார்.
ஆண் போல வேடமணிந்து ‘மின்னல்கொடி’யாக களமிறங்குகிறார் மோகினி. ஆனால், அவளுக்கு நல்ல மனம் இருக்கிறது. அதாவது, பணக்காரர்களிடம் இருந்து கொள்ளையடித்து ஏழைகளுக்கு உதவுவது. அதோடு தன்னை ஏமாற்றியவர்களை பழிவாங்குகிறாள். போலீஸ் இன்ஸ்பெக்டரான ஜெயகுமார், அவளைப் பிடிக்க முயற்சிக்கிறார். பின்னர் அவள் மின்னல் கொடி என்று தெரியாமல் காதலிக்கத் தொடங்குகிறார். ஒரு கட்டத்தில் தெரிய வந்ததும் அவளைத் திருந்தச் செய்து திருமணம் செய்வதாக கதை செல்லும்.
மின்னல்கொடியாக, கே.டி.ருக்மணி நடித்தார். இவர் ‘பாரிஸ் பியூட்டி’ என அக்காலத்தில் கொண்டாடப்பட்டவர். மவுனப்பட காலத்தில் ‘பேயும் பெண்மணியும்’. இம்பீரியல் ஸ்டூடியோ தயாரித்த ‘பாமா விஜயம்’, ராஜா சாண்டோ இயக்கிய ‘விப்ரநாராயணா’, சி.வி.ராமனின் இயக்கத்தில் ‘விஷ்ணு லீலா’ போன்ற படங்களில் நடித்திருக்கிறார். ‘டெவில் அண்ட் தி டான்சர்’ என்ற ஆங்கில படத்திலும் நடித்தவர்.
‘மின்னல்கொடி’, இவர் நாயகியாக நடித்த படம். இப்படத்துக்காக கத்திச் சண்டை, குதிரை சவாரி என ரிஸ்க்கான காட்சிகளில் நடித்து மிரட்டினார். இதன் படப்பிடிப்புக்காக குதிரைச் சவாரி செய்யும்போது கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்தார். மாதக் கணக்கில் படுத்த படுக்கையில் கிடந்ததால் இனி அந்தப் படத்தில் நடிக்க மாட்டார் என்றார், அவருடைய தாயார். ஆனால், ஒப்பந்தம் இருந்ததால் வேறு வழியில்லாமல், உடல் குணமான பின் படத்தை முடித்துக் கொடுத்தார். இதைத் தொடர்ந்து, அதிரடியான ஆக் ஷன் படங்களில் நடிக்க அவருக்கு அதிக வாய்ப்புகள் வந்தன.
தமிழ் சினிமாவில் கதாநாயகி ஒருவர் முதல்முறையாக இரட்டை ஜடை போட்டு நடித்த படம் இதுதான். அதற்கு முன் யாரும் அப்படி நடித்ததில்லை. இதை அப்போது பெரிய விஷயமாக பேசினார்கள். படத்துக்காக அந்தக் கால இந்தி நடிகை கோஹர் மாமாஜிவாலாவை போல கே.டி.ருக்மணிக்கு குஜராத்தி பாணியில் சேலை கட்ட வைத்தார்கள். அக்காலகட்டத்தில் நடித்த இந்திய -ஆஸ்திரேலிய ஆக்ஷன் நடிகையான ‘ஃபியர்லஸ்’ நதியாவின் ஸ்டைலைப் பின்பற்றி சண்டைக் காட்சிகளில் நடித்தார் கே.டி.ருக்மணி.
இந்தப் படத்தை அன்றைய பம்பாயில், ஸ்டன்ட் படங்களில் ஆர்வம் கொண்ட ரம்னிக்லால் மோகன்லால், தனது மோகன் பிக்சர்ஸ் சார்பில் தயாரித்தார். இவர், அந்தேரியில் தனக்கென ஒரு ஸ்டூடியோவையும் வைத்திருந்தார். போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்த னிவாச ராவ் அப்போது ‘ஸ்டண்ட் ராஜா’ என்று அறியப்பட்டார். 1937-ம் ஆண்டு இதே தேதியில் (அக்.30) வெளியான இப்படம், வணிக ரீதியாக வெற்றி பெற்றது. ஆனால் இப்படத்தின் பிரதி கிடைக்கவில்லை.














