ராகுல் ரவீந்திரன் இயக்கத்தில் ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடித்துள்ள படம் ‘த கேர்ள்ஃபிரண்ட்’. ரோகிணி, தீக் ஷித் ஷெட்டி, அனு இம்மானுவேல் உள்பட பலர் நடித்துள்ள இப்படம் நவ. 7-ல் வெளியாகிறது. இதன் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ராஷ்மிகா, அலுவலக நேரம் போல திரைத்துறையிலும் வேலை அமைய வேண்டும் என்று விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.
நடிகை தீபிகா படுகோன் மெகா பட்ஜெட் படங்களான ‘ஸ்பிரிட்’, ‘கல்கி 2898 ஏடி – 2’ ஆகிய படங்களில் இருந்து விலகினார். தினமும் 8 மணி நேர வேலை; தனது குழுவுக்கு சிறப்பு வசதிகள் ஆகிய நிபந்தனைகளை அவர் விதித்ததாகவும் தயாரிப்பாளர்கள் சம்மதிக்காததால் விலகியதாகவும் கூறப்பட்டது. இதையடுத்து சினிமாவில் 8 மணி நேர வேலை என்பது விவாதத்தை எழுப்பி இருக்கிறது.
இதுபற்றி ராஷ்மிகா மந்தனாவிடம் கேட்டபோது, “ஓவர் டைம் வேலை செய்வது பெருமைப்பட வேண்டிய ஒன்றல்ல. நானும் பல முறை இப்படி வேலை செய்கிறேன். நீங்கள் எவ்வளவு பிஸியாக இருந்தாலும், உடல்நலம், தூக்கம், மன அமைதிக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். நடிகர்களும் மனிதர்கள்தான். அவர்களுக்கும் ஓய்வு தேவை.
எனக்கு வாய்ப்பு கிடைத்தால், அலுவலக நேரத்தைப் போலவே 9 முதல் 6 மணி வரை மட்டுமே வேலை செய்ய விரும்புகிறேன். என் குடும்பத்துடன் நேரத்தை செலவிட வேண்டியிருப்பதால், குடும்ப வாழ்க்கையும் முக்கியமானது. எனக்கு போதுமான தூக்கம் வேண்டும், நான் தொடர்ந்து உடற்பயிற்சி செய்ய வேண்டும். ஒரு தாயான பிறகு அது எப்படி இருக்கும் என்பதை என்னால் கற்பனை கூட செய்ய முடியவில்லை” என்று தெரிவித்துள்ளார்.














