தேர்தலுக்கு முன்பே தீப்பிடிக்கும் புதுச்சேரி அரசியல்: ராஜினாமா முடிவில் ரங்கசாமி?

0
18

ஆளுநர்களாய் வருபவர்களும் முதலமைச்சர் நாற்காலியில் அமர்பவர்களும் ஒருவருக்கு ஒருவர் முட்டிக் கொண்டே தான் இருக்க வேண்டும் என்பது புதுச்சேரி மாநிலத்தின் எழுதப்படாத விதி. தற்போது பாஜக கூட்டணி ஆட்சியில் இருக்கும் நிலையிலும் அந்த விதியை மாற்றி எழுத முடியவில்லை என்பது தான் விநோதம். தமிழிசையின் ராஜினாமாவுக்குப் பிறகு, பிரதமர் மோடிக்கு நெருக்கமான ஐஏஎஸ் அதிகாரியான கைலாஷ்நாதன் புதுவையின் துணைநிலை ஆளுநராக அமர்த்தப்பட்டார்.

வந்த புதிதில் முதல்வர் ரங்கசாமியின் கோரிக்கைகளுக்கு செவிசாய்த்து வந்த கைலாஷ்நாதன், ரேஷனில் இலவச அரிசி வழங்க மத்திய அரசிடம் அனுமதி பெற்றுத் தந்தார். ஆனால், அந்த ஒத்துழைப்பு நீண்ட நாள் நீடிக்கவில்லை. சீக்கிரமே முதல்வருக்கும் ஆளுநருக்கும் இடையே பிணக்குகள் பின்னிக் கொண்டது.

இலவச அரிசி கொள்முதலில் முறைகேடு நடந்திருப்பதாக வந்த புகார்களை அடுத்து அரிசி வழங்கும் கோப்புக்கு ஆளுநர் பிரேக் போட்டார். குப்பை டெண்டர், மதுபான தொழிற்சாலை உள்ளிட்ட விவகாரங் களிலும் ஆளுநருக்கும் முதல்வருக்கும் இடையில் முரண்பாடுகள் அதிகரித்தன.

இவர்களுக்கு இடையிலான மோதலானது ஆளும் என்ஆர்.காங்கிரஸ் – பாஜக கூட்டணிக்குள்ளும் விரிசலை ஏற்படுத்தியது. இதனால் சட்டப்பேரவையில் உள்ள தனது அலுவலகத்துக்கு செல்லாமலும் முதல்வர் இருந்து வந்தார். அவரை சமாதானப்படுத்தி பேரவை அலுவலகத்துக்கு வரவைத்த நிலையில், தற்போது மீண்டும் ஆளுநர் – முதல்வர் மோதல் வலுத்துள்ளது.

முதல்வர் ரங்கசாமி ஆட்சிக்கு வந்ததில் இருந்து தீபாவளி பண்டிகைக்கு எம்எல்ஏ-க்களுக்கு அரசு செலவில் பட்டாசுகள், இனிப்புகள் வழங்கப்படும். அதை அவர்கள் தங்களுக்கு வேண்டியவர்களுக்கு தருவார்கள். ஆனால், இந்த ஆண்டு மத்திய அரசின் சுற்றறிக்கையை சுட்டிக்காட்டி எம்எல்ஏ-க்களுக்கு தீபாவளி பரிசுகளை வழங்க தடைபோட்டுவிட்டார் ஆளுநர்.

27-ம் தேதி நடந்த மின்சாரப் பேருந்துகள் இயக்க தொடக்க விழாவில், மேடையிலேயே தனது அதிருப்தியை முதல்வர் ரங்கசாமி வெளிப்படுத்தினார். அந்த நிகழ்ச்சியில் ஆளுநரை சாட்சியாக வைத்துக் கொண்டு பேசிய ரங்கசாமி, ஆட்சி நிர்வாகத்தில் தனக்கு பல்வேறு குறைகள் இருப்பதாகக் குறிப்பிட்டதுடன் அந்த சிரமங்களுக்கு இடையில்தான் நலத்திட்டங்களை செயல்படுத்துவதாகச் சொல்லி ஆதங்கப்பட்டார்.

தொடர்ந்து அன்று மாலையே, புதிதாக தேர்வு செய்யப்பட்ட துணை தாசில்தார்களுக்கு பணி ஆணைகள் வழங்கும் நிகழ்வு நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு வருவாய்த் துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதல்வர் ரங்கசாமி தலைமை வகிப்பார், சபாநாயகர் செல்வம், அமைச்சர் ஜான்குமார் பங்கேற்பார்கள் என அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால், நிகழ்ச்சியில் ஆளுநர் கைலாஷ்நாதன் மட்டுமே பங்கேற்று புதிய துணை தாசில்தார்களுக்கு பணி ஆணைகளை வழங்கினார். அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டிருந்த முதல்வர் உள்ளிட்ட அத்தனை பேரும் இந்த நிகழ்வை புறக்கணித்து தங்கள் எதிர்ப்பை ஆளுநருக்கு மறைமுகமாக தெரிவித்தனர். இந்த நிலையில், ஆளுநரைச் சமாளிக்க முடியாத ரங்கசாமி தனது பதவியை ராஜினாமா செய்யும் முடிவில் இருப்பதாகவும் தகவல் பரவி வருகிறது. ரங்கசாமி தரப்பில் இதை மறுக்கவும் இல்லை.

இதுபற்றி முன்னாள் முதல்வர் நாராயணசாமியிடம் கேட்டதற்கு, “நவம்பர் 1-ம் தேதி (புதுச்சேரி விடுதலை நாள் விழா) முதல்வர் ரங்கசாமி தனது பதவியை ராஜினாமா செய்யப் போவதாக தகவல் பரவி வருகிறது. அவர் ராஜினாமா செய்தால் அடுத்த நிமிடமே அவரை திகார் சிறைக்கு அனுப்பி விடுவார்கள்.

இதற்கு ரங்கசாமி ரெடியாக இருந்தால் ராஜினாமா செய்யலாம். ‘கிரண்பேடியை நாராயணசாமி அட்ஜெஸ்ட் செய்து போயிருந்தால், புதுச்சேரியில் திட்டப் பணிகள் நன்றாக நடந்து இருக்கும்’ என்று முன்பு ரங்கசாமி கூறினார். ஆளுநருடன் அட்ஜெஸ்ட் செய்து செல்லும் ரங்கசாமியால் இப்போது என்ன செய்ய முடிந்தது?ராஜினாமா செய்யப் போவதாக ஜிபூம்பா வேலை காட்டுகிறார்” என்கிறார்.

புதுச்சேரி காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கமோ, “சுட்டுப் போட்டாலும் ரங்கசாமி முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய மட்டார். அவர் மோடிக்கு அண்ணன்” என்றார். ஆளும் கூட்டணியில் அங்கம் வகிகும் பாஜகவினரோ, “எங்கள் மாநிலத் தலைவர் ராமலிங்கம் இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுவார்” என்றார்கள்.

ஆனால், என்ன நடந்ததோ தெரியவில்லை, செய்தியாளர் சந்திப்பையே கேன்சல் செய்துவிட்டார் ராமலிங்கம்.தேர்தல் நெருங்கும் சூழலில் புதுச்சேரி என்டிஏ கூட்டணியில் நடக்கும் குஸ்திகளை கும்மிகொட்டாத குறையாக ரசித்துக் கொண்டிருக்கிறது எதிர் முகாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here