‘கட்சிக்காக உழைத்த உண்மைத் தொண்டர்களை ஒதுக்குகிறார்கள்!’ – கனிமொழியிடம் திமுக கவுன்சிலர் ஆதங்கம்

0
17

“திமுகவில் 36 ஆண்டுகளுக்கு மேலாக உழைத்த உண்மை தொண்டர்கள் ஒதுக்கப்படுகிறார்கள். 7 ஆண்டுகளாக உறுப்பினர் அட்டையைக்கூட புதுப்பிக்காமல் இருப்பதை தேர்தல் நேரத்தில் கவனிக்க வேண்டும்” – நாகர்கோவிலில் நடைபெற்ற திமுக உள்ளாட்சி பிரதிநிதிகள் கூட்டத்தில் கனிமொழி எம்.பி-யை சாட்சியாக வைத்துக் கொண்டு உள்ளாட்சி பிரதிநிதி ஒருவர் இப்படி குமுறியதும் அதைக் கேட்டு அந்த அரங்கில் இருந்த அத்தனை பேரும் கைதட்டி அதை ஆமோதித்ததும் தற்போது வீடியோவாக வைரலாகி வருகிறது.

அக்டோபர் 26-ம் தேதி நாகர்கோவிலில் நடந்த கன்னியாகுமரி மாவட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கனிமொழி எம்.பி., பால்வளத் துறை அமைச்சர் மனோதங்கராஜ், நாகர்கோவில் மேயர் மகேஷ், முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன் ஆகியோர் மேடையில் அமர்ந்திருந்தனர்.

அப்போது, குளச்சல் நகராட்சியின் 15-வது வார்டு கவுன்சிலர் ரஹீம், மேலே சொன்னவாறு தன் மனக்குமுறலைக் கொட்டத் தொடங்கியதைக் கேட்டு கனிமொழி அதிர்ச்சியானார். உடனே, பத்திரிகையாளர்கள் மற்றும் புகைப்படக்காரர்களை அங்கிருந்து வெளியேறுமாறு மேயர் மகேஷ் கேட்டுக்கோண்டார்.

தொடர்ந்து பேசிய ரஹீம், “வரும் சட்டப்பேரவை தேர்தலைச் சந்திக்க திமுகவினரிடையே ஒற்றுமை இல்லை. வாக்குகளை ஒருங்கிணைப்பதற்கான முறையான பணி தேவை. உட்கட்சி பூசல் அதிகரித்துள்ளது” என்று சொல்லிவிட்டு அமர்ந்தார். கூட்டம் முடிந்ததும் இதுகுறித்து நாம் ரஹீமிடம் பேசியபோது, “திமுகவில் 1989-ல் இருந்து உழைத்து வருகிறேன்.

குளச்சல் நகராட்சியில் தொடர்ந்து இருமுறை கவுன்சிலராக இருந்து வருகிறேன். ஆனால், உள்ளூரில் கட்சி நிர்வாகிகளுக்கு இடையேயான போட்டியில், உண்மையான தொண்டர்கள் கட்சியில் இருந்து ஒதுக்கப்படுகிறார்கள். உணர்வுடனும், உண்மையுடனும் உழைப்பவர்களை தேர்தல் நேரத்தில் கட்சி கைவிட்டு விடுமோ என்ற கவலை ஏற்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் இக்குறையை காணமுடிகிறது.

2026-ல் திமுக மீண்டும் ஆட்சியை பிடிக்கவேண்டும் என்றால், திமுகவுக்காக இரவு, பகலாக உழைக்கும் உடன்பிறப்புகளை மறந்துவிடக்கூடாது. அனுபவமிக்க பல தொண்டர்கள், சுயநலமிக்க புதிய நிர்வாகிகளால் ஒதுக்கப்பட்டு வருகின்றனர். 2018-க்குப் பிறகு எங்களது திமுக உறுப்பினர் அட்டை இதுவரை புதுப்பிக்கப்படவில்லை. அந்த அளவு களப்பணியில் இங்கிருக்கும் திமுக நிர்வாகிகள் அலட்சியம் காட்டி வருகின்றனர். பதவிக்காக பிற கட்சிகளில் இருந்து வந்தவர்களுக்கு கொடுக்கும் மரியாதை எங்களுக்கு இல்லை.

இதை திமுக தலைமை கவனித்து சரிசெய்தால் தான் மீண்டும் ஆட்சியை பிடிக்க முடியும். தற்போதைய இந்த கள நிலவரத்தைதான் வெளிப்படையாக கூறினேன். கனிமொழி எம்.பி.யும் நடவடிக்கை எடுப்பதாக கூறினார். மற்றபடி கூட்டத்தில் இருந்து என்னை வெளியேற்றியதாக பரவிய தகவல் தவறு. என்னைத் தொடர்ந்து பேச அனுமதித்தனர். அந்த நேரத்தில் பத்திரிகையாளர்கள்தான் வெளியேற்றப்பட்டனர்” என்றார் அவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here