பஞ்சாப் மாநிலத்தின் சங்ரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மன்பிரீத் சிங் (27). இவர் கனடாவின் டோரண்டோ நகரில் உள்ள பிராம்ப்டனில் கடந்த சில ஆண்டுகளாக வசித்து வருகிறார். அங்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமன்பிரீத் சய்னி என்ற இளம்பெண்ணை கடந்த வாரம் கொலை செய்துள்ளார்.
அமன்பிரீத்தின் உடலை லிங்கனில் உள்ள ஒரு பூங்காவில் இருந்து போலீஸார் கடந்த 21-ம் தேதி கைப்பற்றினர். அவரது உடலில் பல இடங்களில் காயங்கள் இருந்ததை போலீஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். இதையடுத்து, விசாரணைக்கு பயந்து மன்பிரீத் இந்தியாவுக்கு தப்பி வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், நயாகரா போலீஸார் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இளம் பெண் தனிப்பட்ட விரோதம் காரணமாகவே கொலை செய்யப்பட்டுள்ளார். இதனால், பொது பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை. குற்றவாளியின் படம் வெளியிடப்பட்டுள்ளது.
மக்கள் அவரை பார்க்க நேர்ந்தால் பிடிக்க முயற்சிக்க வேண்டாம். உடனடியாக 911 என்ற எண்ணுக்கு தகவல் தெரிவிக்கவும்’’ என்று கூறியுள்ளனர். கொலைக் குற்றவாளி இந்தியாவுக்கு தப்பியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதால் கனடா பாதுகாப்பு அதிகாரிகள் இந்திய அதிகாரிகளை தொடர்பு கொண்டு உதவி கோரியுள்ளனர்.














